பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






மார்ச் 6


இரவலர்க்கு ஈயும் வள்ளலாகவாவது வந்தருள்க!

இறைவா! ஆரூரர் எவ்வளவு புண்ணியம் செய்தவர். அதனால், நீ ஆரூரர்க்குத் தோழனாக வந்தாய். அதனால், ஆரூரர், தம் மனத்தில் நினைத்ததெல்லாம் உன்னிடம் கேட்டார்; பேசினார்; ஏசினார்; நீயும் அவர் பேச்சையும், ஏச்சையும் பொறுத்துக்கொண்டு அருள் செய்தாய். எனக்கு ஒரு தோழன் அப்படி வாய்க்கவில்லையே! நான் என்ன செய்ய! என் மனத்தில் இருப்பதைச் சொல்லி அழுவதற்குக் கூட தோழன் கிடைக்கவில்லையே!

இறைவா! எனக்கும் எண்ணற்ற ஆசைகள். யாரிடம் கேட்பது? கேட்பாரும், கொடுப்பாரும் இல்லாமல் என் ஆசைகள் முளையிலேயே கருகிப்போய் விட்டன. எனக்கு நீ தோழனாய் வரக்கூடாதா? என்னால் நீ விரும்பும் சுந்தரத் தமிழில் பாடத் தெரியாதே! இறைவா! நீ தமிழோடு இசை கேட்கும் இச்சை மீதுார்ந்தவன் என்று தெரிந்திருந்தால் நானும் கவிஞனாக வளர்ந்திருப்பேன்! பண் சுமந்த பாடல்களைப் பாடுந்திறனைப் பெற்றிருப்பேன். இது எனக்கு அன்றே தெரியாமல் போய், எனக்குப் புரியாத மொழியில் "அஷ்டோத்திரம்" செய்து ஏமாந்துபோனேன். இறைவா மன்னித்துக்கொள். இனி நான் கவிஞனாதல் அரிது. ஏழிசையில் உனது புகழ் பரவுதலும் அரிது. எனக்குத் தெரிந்த தமிழில் இப்படி எழுதிப் பிரார்த்தனை செய்கிறேன். இறைவா அருள்கூர்ந்து ஏற்றுக்கொள். சுந்தரர் தமிழுக்குத் தோழனாக வந்தருளிய நீ என் தமிழுக்கு வரமாட்டாய். அது எனக்கே தெரிந்த உண்மை-ஆயினும் ஆசை வெட்கமறியாது. இரந்து கேட்கின்றேன். இரவலர்க்கு ஈயும் வள்ளலாகவாவது அருள் செய்க!