பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

87






மார்ச் 11


பெண்மையைப் போற்றும் மனப்பாங்கினை அருள்க!


இறைவா! உமையாள் கேள்வனே! “கற்பு, கற்பு” என்று கதறுகிறார்களே அது என்ன கற்பு? நின் மனைவி உன்னைப் பற்றி என்ன நினைக்கிறாளோ? இறைவா! உயர்ந்த அன்பு நலம்தானே கற்பு! நாட்டில் எங்கேயும் அன்பைக் காணேன் கடவுளே. நின்னை நினைவூட்டுபவளே பெண்தான்.

பெண்ணே வாழ்க்கையில் பெரும் பங்கு கொள்கிறாள் -அவள் தாயாகச் செய்பவை ஏட்டில் எழுதிப் பார்க்கக் கூடிய அளவினதா? ஆனால் பெண்மை சமூக வாழ்க்கையில் பெருமைப்படுத்தப்பட வில்லை.

இறைவா, நீ உமைக்கு எவ்வளவு மதிப்புக் கொடுக்கிறாய்! சக்தியாய்ச் சிவமாகி என்று சான்றோர் போற்றுவர். உன்னை வணங்கும் மக்களுக்கு ஏன் இந்தப் புத்தி வரவில்லை? பெண், காமப் பொருள் அல்ல; பெண், தாய்; அருளின் சின்னம். பெண்மையைப் போற்றும் மனப்பாங்கினை அருள்க!