பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஏராளமான வளைவுகள் அதில் உள்ளன. வளைவுகளின் காரணமாக நிகழ்ந்த விபத்துக்களும் அதிகம். ஒட்டுமொத்தமாக வரலாற்றுப் புத்தகத்தைப் படித்து முடித்த பிறகு நாம் பெறும் ஒரே உணர்வு, இன்னமும் மனிதன் மனித வடிவத்தில் உலாவருகிறானே தவிர, அவன் இன்னமும் மனிதனாகவில்லை என்பதே! இந்தச் சிந்தனை திருவள்ளுவருக்கு இருந்திருக்கிறது. அதனால்,

மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகும் மாந்தர் பலர்”[1]
என்றும்
மக்களே போல்வர் கயவர்”[2]
என்றும்

வேதனையுடன் கூறிய குறள்கள் சிந்தனைக்குரியன.

இங்ஙனம், பகுத்தறிவைப் பெற்றிருந்தும் அவற்றை உபயோகப்படுத்தாமல் நெறிமுறை தவறிச் சென்று இன்னல் பட்ட மனிதகுலத்திற்கு வழிகாட்ட அவ்வப்பொழுது தக்க ஞானிகள்-பேரறிஞர்கள் பலர் தோன்றியுள்ளனர். அவர்களின் பட்டியலை இங்குத் தருவது இயலாத ஒன்று. ஆனாலும், குறிப்பிடத்தக்கவர்கள் சிலரையாவது நினைவிற் கொண்டுவருவது நம் கடன். திருவள்ளுவரை ஒட்டி வருகின்ற சிந்தனையாளர்கள் சிலரை நினைந்து பார்ப்போம்.

கன்பூசியஸ்

திருவள்ளுவர் காலத்துக்கு முந்தியவர்களில் சீன நாட்டில் தோன்றிய கன்பூசியஸும், கிரேக்க நாட்டில் தோன்றிய சாக்ரட்டிஸும், குறிப்பிடத் தகுந்தவர்கள். கன்பூசியஸ் ஒரு சிறந்த மாமேதை. மனித சமுதாயத்தை அறவே பழமையிலிருந்து விலக்கிச் செல்ல முடியாதென்ற எண்ணத்தின் காரணமாகச் சீன நாட்டில் வழங்கிய பழைய கருத்துகளுக்குப் புதுப்பொருள் கண்டவர். அவர் கண்ட புதுப்பொருள் அவருடைய சிந்தனையில் தோன்றியது. அவர், ஒழுக்கத்தையே முதல்நிலைப்படுத்தினார். அது மட்டுமன்று

  1. திருக்குறள், 278.
  2. திருக்குறள், 1071.