பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தோன்றிய சிந்தனை முத்துக்களை அவனுடன் இருந்த பிளேட்டோ அழகுறத் தொகுத்துத் தந்திருக்கிறான். சாக்ரட்டிஸ் உரையாடல்கள் மூலமே உயர்நெறியை யுணர்த்தியவன். வினாக்கள் மூலமே விடைகளைத் தந்தவன். சாக்ரட்டிஸும் கன்பூசியஸைப் போல உயிரினும் உயர்வாக ஒழுக்கத்தை மதிக்கக் கற்றுக்கொடுத்தான். சாக்ரட்டிஸ் மனித உலகத்தின் மனச்சாட்சிக்காகப் போராடினான். மனிதனின் சிந்தனை ஒருமைக்காகப் போராடினான். ஆயினும், அவனை அந்தக் காலச் சமுதாயம் ஏற்றுக்கொள்ளவில்லை. கன்பூசியஸ் தன் தலைமுறையிலேயே வெற்றி பெற்றார். சாக்ரட்டீஸ் அவன் தலைமுறையில் வெற்றி பெறவில்லை. உயிரைப் பணயமாகக் கொடுத்தான். ஆனால், மனித குலத்தின் அறிவு இயக்கம் உள்ளவரை சாக்ரட்டீஸின் பெயர் நினைவிலிருக்கும்.

திருவள்ளுவர்

திருவள்ளுவர், தமிழகம் முற்றாக நிலை தளர்ந்திருந்த பொழுது மறைநூல் செய்தாரென்று கூறமுடியாது. ஆயினும், திருவள்ளுவர் தோன்றிய காலம் தமிழகத்திற்கு ஒரு சோதனைக் காலமே. காதல் காமமாக உருமாறிப் பரத்தையர் ஒழுக்கம் பரவியிருந்தது. வீரம், சிறுகலகங்களாக உருமாறி ஒரு குலத்துள்ளோரே தமக்குள் ஒருவரையொருவர் அடுதலும் தொலைதலுமாக இருந்தனர். தமிழ் வழக்குக் கொவ்வாத அயல் வழக்குகள் ஊடுருவி அலைக்கழித்துக் கொண்டிருந்தன. இந்த நெருக்கடியான காலக் கட்டத்தில் திருவள்ளுவர் தோன்றினார். திருவள்ளுவர் திருக்குறளை இயற்றி, முறையே தனி மனிதன், குடும்பம், நாடு, அரசு ஆகியவைகளுக்கு அறநெறி காட்டி வழி நடத்தினார். திருவள்ளுவர் தந்த அறநெறி அவர் காலத்தில் ஓரளவு வெற்றி பெற்றது. ஆனாலும் முழுமையான வெற்றியை அது அடையவில்லை. திருவள்ளுவருக்குப் பிறகும் திருவள்ளுவர் நெறி இன்றுவரை முழுமையாக வெற்றி பெறவில்லை.