பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

99


மார்க்ஸ் - லெனின்

சோவியத்து நாட்டில் லெனின், மாமுனிவர் மார்க்ஸ் தந்த மூலதனத் தத்துவக் கொள்கைகளுக்குச் செயல்முறைக் கோட்பாடுகளை வகுத்தான்; புரட்சிக்காகச் சிந்தித்தான்; சமுதாய மாற்றத்தைக் குறித்துப் பலரைச் சிந்திக்க வைத்தான். லெனின் அணியில் “கூட்டத்தில் கோவிந்தா” போட்டவர்கள் இல்லை. தன் அணியைச் சார்ந்தவர்களுக்குப் புரட்சித் தத்துவங்களைக் கற்றுக் கொடுத்தே அணிவகுத்து நடத்தினான். ஆதலால் புரட்சி எளிதாயிற்று; புதுயுகம் பிறந்தது.

பிரெஞ்சுப் புரட்சி - வால்டேர், ரூசோ

பிரெஞ்சு நாட்டின் புரட்சிக்குக் காரணமாக இருந்த வால்டேரும் ரூசோவும் சிறந்த சிந்தனையாளர்கள். அவர்களுடைய சிந்தனை புரட்சி நெருப்பைப் பற்ற வைத்தது. ஆனால் அந்த நெருப்பு தொடர்ந்து எரிவதற்குக் கோட்பாடுகள் இல்லாமல் போயின. மக்கள் புரட்சியில் ஈடுபட்டார்கள்; உணர்ச்சி வசப்பட்டே ஈடுபட்டார்கள். புரட்சி தோன்றியது. அது அன்றிருந்த ஆட்சியை மாற்றியது. ஆனால் புரட்சிக்குப் பின் தோன்றிய ஆட்சியின் முறை மாறவில்லை. அதாவது சர்வாதிகாரிகள் மாறினார்கள் சர்வாதிகாரம் மாறவில்லை என்பதுதான் வரலாறு உணர்த்தும் உண்மை. மார்க்ஸின் சிந்தனைக்குப் புரட்சிகரமான செயலுருவம் கொடுக்க லெனின் இருந்தான். அதனால் நிலையான மாற்றம் கிடைத்தது. வால்டேர், ரூசோ சிந்தனைகள் புரட்சி உருவம் பெற்றன. ஆனால் செயலுருவம் கொடுக்கப்பெறவில்லை. அதனால் புரட்சி வெடித்தது; ஆனால் புதுமைச் சமுதாயம் பிறக்கவில்லை.

புரட்சி விளக்கை அணைத்தனர்

கன்பூசியஸுக்குக் கிடைத்த வெற்றி திருவள்ளுவருக்குச் சமுதாயத்தில் கிடைக்கவில்லை; அரசியலில் கிடைக்கவில்லை.