பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

105


அறிந்து கொள்ள வேண்டும். உடல் நோய்க்கு மூலிகைகள் மருந்து; மனக்குற்றத்திற்குக் கருத்துக்களே மருந்து. மனிதன் தன் மனக்குற்றங்களை அறிந்துகொண்டு அக்குற்றங்களை நீக்குதற்குரிய நூல்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மனக்குற்றம் நீங்குகிறவரை கற்கவேண்டும். அக் குற்றங்கள் நீங்கிய நிறை நிலையில் ஒரோவழியன்றி என்றும் நின்று ஒழுக வேண்டும். இது வள்ளுவர் காட்டும் வழி.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக[1]

என்பது எண்ணத்தக்கது.

செவிச் செல்வம்

கற்பதற்குரிய நூல்கள் பல்கிப் பெருகி வளர்ந்து கிடக்கின்றன. அவை முழுவதையும் தேர்ந்தெடுத்துக் கற்றுத் தெளிவதற்கு ஒரு மனிதனுக்குரிய வாழ்நாள் போதாது. ஆதலால், நல்ல நூல்களைக் கற்றலோடு கற்றோர் வாயிலாகக் கேட்பது, மேலும் துணை செய்யும் என்பது திருவள்ளுவர் கருத்து. அதுமட்டுமன்று, தம்மில் மூத்த சான்றோர், நல்ல நூல்களைக் கற்று, கற்ற கல்வியை வாழ்க்கையில் சோதனைப் படுத்தி ஒழுக்கமாக்கிக் கூறுவர். அங்கனம் கூறும் சான்றோரின் சொற்களைக் கேட்பதன் மூலம் எளிதில் வாழ்க்கையில் முன்னேறலாம். கற்கும் இடர்ப்பாடுகளைத் தவிர்க்கலாம்.

இழுக்க லுடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்[2]

என்பது வள்ளுவர் வாய்மொழி. ஆதலால் ஒரு மனிதன் முழுமையுறக் கற்கும் முயற்சி மட்டும் போதாது; நல்லவை கேட்கும் முயற்சியும் தேவை. நல்லவை கேட்க முனையாத செவிகளைத் திருவள்ளுவர், ‘தோட்கப் படாத செவி’[3] என்பார். “செவிகாள் கேண்மின்களோ”[4] என்று அப்பரடிகள்

  1. திருக்குறள், 391.
  2. திருக்குறள், 415,
  3. திருக்குறள், 418.
  4. திருநாவுக்கரசர், நான்காந்திருமுறை, 84.