பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

107


விடாது. அன்பினைப் பற்றிய படித்தல், ஒப்பித்தல் அன்பினைத் தந்து விடா. அவையனைத்தும் வாழ்க்கையில் சோதனைப்படுத்தப்பட வேண்டும்; நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அப்போதே அறிவு தோன்றும். உலகில் தோன்றிய உயர்ந்த சிந்தனை நூல்கள், அறநெறி நூல்கள் இலட்சக் கணக்கில் விற்பனையாகின்றன. அவற்றைப் படிப்பவர்களும் ஆயிரம் ஆயிரம் பேர். அவற்றிற்கு உரை கூறுவோர்-விளக்கம் கூறுவோர் பல நூறு பேர். ஆயினும் உலகத்தில் முழுமையான அறிவுடையோரைக் காண்டது அரிதாகிவிட்டது. நூல்களைக் கற்பவர்கள் அறிவுடையராக மாட்டார்கள். இன்னும் பச்சையாகச் சொன்னால் கற்காதவர்களைவிட - நூல்களைப் படிக்காதவர்களைவிடக் கற்றவர்களில் பலர் முட்டாள்களாக இருப்பார்கள். “பலகற்றும் கல்லார் அறிவிலாதார்?[1] என்பது வள்ளுவர் வாக்கு. ‘கற்ற நிர்மூடர்’ என்பார் தாயுமானார். நூல்கள் பலவற்றைக் கற்றாலும் அறிவு, அனுபவத்தின் வழியிலேயாம்.

நுண்ணிய நூற்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்[2]

என்று கூறி வள்ளுவர் விளக்குகின்றார். நூல்கள் பலவற்றைக் கற்றாலும் அவர்தம் அனுபவத்திற்கு வந்து உண்மையில் அவருக்கு உரிமையுடையதாக மாறிய அறிவே வாழ்க்கையில் மிகுந்து நிற்கும்.

அறிவுடைமைக்கும் அறிவின்மைக்கும் என்ன அடையாளம்? அறிவுடைமைக்கும் அறியாமைக்குமுள்ள வேறுபாடு மிகப்பெரியது. ஆனால் உலகம் அதனை முற்றாக உணரவில்லை. சில செய்திகளைத் தெரிந்து கொள்வது அறிவுடைமையாகாது; பேசுதலும் எழுதுதலும் கூட அறிவுடைமை யாகாது. இவையெல்லாம் அறிவின் வாயில்கள். உண்மையான அறிவுடைமை துன்பத்தை மாற்றுங்கருவி. நேற்று அழுத மனிதன் இன்று அழாமல் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். நேற்றைய

  1. திருக்குறள்-140.
  2. திருக்குறள், 373.