பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தோல்வி இன்று வெற்றியாக வேண்டும். நேற்றைய துன்பத்தை இன்று இன்பமாக மாற்றிக்கொள்ள வேண்டும். அங்ஙனம் செய்யப் பயன்படும் கருவியே ‘அறிவு’.

அறிவு அற்றம் காக்கும் கருவி[1]
அறிவுடையார் ஆவது அறிவார்[2]

என்பன திருவள்ளுவர் வாக்கு.

மனிதன், தன் அன்றாட வாழ்க்கையின் அனுபவங்களைப் படிப்பினையாக்கிக் கொள்ளவேண்டும். அவ்வழி அறிவினைப் பெறவேண்டும். மனிதனின் வாழ்நாள் ஓடிக் கொண்டேயிருப்பது. அதில் சென்ற காலம் நிகழ் காலத்திற்கு வித்திடுகிறது. நிகழ்காலம் நாளைய எதிர்காலத்திற்குத் தளம் அமைக்கிறது. இதுதான் உண்மையான வாழ்வியலுணர்வு. ஆனாலும் நேற்றைய வாழ்க்கையை இன்று நினைந்து மகிழ்தல் அல்லது கவலைப்படுதல் ஓரளவு மருந்தென வரவேற்கப்படலாம். அங்ஙனம் மகிழ்தலும் அழுதலுமே இன்றைய வாழ்க்கையாக மாறிவிடக் கூடாது. நாளைய வாழ்க்கையை எண்ணி எதிர்பார்த்து இன்றையச் செயல்களை வகுக்க வேண்டும். ஆனால், இப்படிச் செய்ய சில மத போதகர்கள் இடம் தருவதில்லை. ‘நாளை பற்றிக் கவலைப்படாதே! அது கடவுள் கையிலிருக்கிறது’ என்று சொல்லுகிறார்கள். ஆனால் நம்முடைய சமயம், அங்கனம் கூறுவதில்லை. திருவள்ளுவர்,

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்[3]

என்று கூறி விளக்குகிறார்.

சேக்கிழார்,

சென்ற காலத்தின் பழுதிலாத் திறமும் இனியெதிர்
காலத்தின் சிறப்பும்
[4]

  1. திருக்குறள், 421.
  2. திருக்குறள், 427.
  3. திருக்குறள், 429,
  4. திருத்தொண்டர்புராணம், 2562.