பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கொள்ளுகிறார்கள். ‘சாநாளும் வாழ்நாளும் யாரறிவார்’[1] என்பார் திருஞானசம்பந்தர். “நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை யென்னும் பெருமை யுடைத்திவ் வுலகு”[2] என்பார் திருவள்ளுவர். ஆதலால் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வரையறுக்கப்பட்ட வாழ்நாள் எல்லைக்குள்ளாகவே முழுமையுறல் வேண்டும்; நிறைநலம் பெறுதல் வேண்டும். ஆதலால் அவன் காலத்தின் அருமை அறிந்து போற்றுதல் வேண்டும். இயற்கையளித்த கொடைகளில் தலையாயது காலம். மனிதன் விரும்பினாலும் விரும்பாது போனாலும் காலத்தின் முத்திரை அவனிடம் பதிந்தே தீருகிறது. மனிதனின் வாழ்நாள், வினாடி வினாடியாகக் கரைந்து ஒடுகிறது. வினாடிகளைக் காப்பாற்றிப் பயன் கொண்டால் தான், வாழ்நாளை முழுமையாகப் பயன்படுத்த முடியும். நமது சமயம் இறைவனைக் காலம் கடந்தவன் என்று கூறும். அதற்குப் பொருள், அவன் காலங்களைக் கடத்துகிறவன் என்பதன்று. “ஞாலமே விசும்பே இவை வந்துபோம் காலமே” என்று திருவாசகம் பேசும். அவனே காலமாக நிற்கின்றான். சேரமான் பெருமாள் நாயனார் பூசனையில், குறித்த காலத்தில் சிலம்பொலி காட்டியதும், காஞ்சியில் பல்லவ மன்னன் கட்டிய பெருங்கோயிலில் எழுந்தருள்வதற்குரிய நாளை மாற்றியதும், இறைவன் காலத்தைப் போற்றுகிறான்; குறித்த காலத்தில் நிகழ்வுகளைச் செய்கிறான் என்பதை உணர்த்துகின்றன. அதனால்தானே இறைவனின் நிகழ்வுகளாக இருக்கின்ற இயற்கை, ஓர் ஒழுங்கு, முறை பிறழாத நிகழ்ச்சி “Order and Constancy உளவாக அமைந்துள்ளது. அவன் காலங்கடந்தவன் என்பதன் பொருள், காலத்தினாலாய முதுமைத் தழும்புகள் - மூப்பின் அடையாளங்கள் அவனுக்கு இல்லை என்பதேயாம். ஆதலால், மனிதன் காலத்தைப் போற்றிப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அதனாலேயே “நாளைப் பார்” என்று பழமொழி வழி ஆணை பிறந்தது; அதற்குப் பொருள் “நாளின் அருமைப் பாட்டினை அறிந்து

  1. திருஞானசம்பந்தர், மூன்றாந்திருமுறை, திருச்சாய்க்காட்டுப் பதிகம், சீகாமரப்பண் 3-ஆவது பாடல்.
  2. திருக்குறள், 336.