பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

111


பாதுகாத்துப் பயன் கொள்க” என்பதேயாம். அதற்கு மாறாகப் பலர் பஞ்சாங்கத்தைப் புரட்டுகின்றனர். நல்லநாள் பார்க்கின்றனர். எது நல்லநாள்? வாழ்க்கையின் நாள்கள் அனைத்தும் முத்து முத்தான நல்ல நாள்கள். முழுமையாகப் பயன்படுத்த வேண்டிய நாள்கள். இதனை மனிதன் மறந்துவிட்டுச் சில நாள்களைக் கழிக்கின்றான். இது வாழும் முறையன்று.

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி
சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே[1]

என்றார். நாளென் செயும் வினைதான் என் செய்யும்’[2] என்பது கந்தரலங்காரம். ஆதலால் மனிதனின் வெற்றிக்கு முதற்படி காலத்தின் அருமையறிந்து பயன்படுத்துதலே!

உயிரறுக்கும் வாள்!

திருவள்ளுவர் காலமறிதல் என்றே ஓர் அதிகாரம் வகுத்து ஓதுகிறார். நகைச்சுவையாகக் காலம் கழிந்தோடும் செய்தியை நிலையாமை அதிகாரத்தில் குறிப்பிடுகின்றார்,

நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும் வாளது உணர்வார்ப் பெறின்[3]

என்றார். வாள் மரத்தினை ஒட்டு மொத்தமாக ஒரு நொடியில் அறுத்துவிடுவதில்லை. ஓர் இழுவைக்கு ஒரு நூல் அளவுதான் அறுபடும். அதுபோல ‘இன்று’ என்றும் ‘நாளை’ என்றும் ‘நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம்’என்றும் நாள்களைக் கடத்துகின்றவர்கள் வாழ்வு, பயனற்றுப் பாழ்படும் என்பது வள்ளுவர் செய்யும் எச்சரிக்கையாகும். இங்ஙனம் எதிர்மறையாக எச்சரித்த திருவள்ளுவர் ‘பருவத்தோடு ஒட்ட ஒழுகல்’[4] என்றும் ‘கருவியால் காலம்

  1. திருஞானசம்பந்தர், கோளறு திருப்பதிகம், 1.
  2. கந்தரலங்காரம், 38.
  3. திருக்குறள், 334.
  4. திருக்குறள், 482.