பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அறிந்து செயல்[1] என்றும் கூறி வழி நடத்துகிறார். இறுதியாக, ‘ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின்’,[2] என்று வழி நடத்துகின்றார்.

இடமறிக

மனிதன் அறிவினைப் பெற்றாலும் காலமறிந்து கடமைகளை மேற்கொண்டாலும் தாம் மேற்கொள்ளும் முயற்சிகள் பயன்தருதற்குரிய இடமறிந்து முயற்சியினை மேற்கொள்ள வேண்டும். முயற்சியும் இடமும் வாய்ப்பாக அமையின் வலிமை இன்மையும் வலிமையாக மாறும், வெற்றிகளைத் தரும். ஆதலால் காலம் அறிதலோடு களங்கள் அறிந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஏவலர்

மனிதன் மேற்கொண்டுள்ள வாழ்க்கைப் பயணம் ஒரு நெடிய பயணம். இந்நெடிய பயணத்தைத் தனியே நடத்துதல் அரிது. எண்ணிய பணிகளை இனிதே முடித்தற்குரிய துணைவர்களை-ஏவலர்களைக் கருவியாகப் பெற்றிடுதல் வேண்டும். ஏவலர்கள் எளிதில் அமைவதில்லை.

யான்கண் டனையர்என் இளையரும்[3]

என்று புறநானூறு பேசும். அதாவது, கண்கள்வழிக் கருத்தறிந்து, கருதியதை முடிக்க வல்லவர்கள் ஏவலர்கள். இன்று அத்தகு ஏவலர்கள் எங்குக் கிடைக்கின்றனர். அப்பூதியடிகளுக்கு வாய்த்த ஏவலர் மிகச்சிறந்த ஏவலர். அப்பரடிகள் எழுப்பிய ஒரு வினாவுக்குத் திரும்ப அவர் வினாக் கேட்கவேண்டிய அவசியம். இல்லாத வகையில் முழுமையான விடை சொன்ன அந்த ஏவலரின் அருமை நினைந்து நினைந்து மகிழத்தக்கது. அத்தகு ஏவலர்கள் இன்று கிடைப்பதில்லை. ஏவலர்களைத் தேர்ந்தெடுத்தல் வாழ்க்கையில் மிகச்சிறந்த சாதனைகளுள் ஒன்று. அறத்தின் காரண

  1. திருக்குறள், 483.
  2. திருக்குறள், 484.
  3. புறம் 191.