பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

113


மாகவோ பொருளின் காரணமாகவோ இன்பத்தின் காரணமாகவோ உயிர்க்கு வரும் துன்பத்தின் காரணமாகவோ தமையுடைய தலைவனுக்கு மாறாக- எதிராகச் செயற்பட விழையாதோரையே ஏவலராகத் தேர்ந்து கொள்ளவேண்டும். ஏவலர்க்கு அறம் தம் தலைவன் வழி நிற்றலேயாம். தம் தலைவன்மாட்டு அறமல்லாதன இருக்குமாயின் அவனிடத்திலேயே போராடி அறம் காணவேண்டும். நல்லுழின்மையால் அவனிடமே திருத்தம் காண இயலாவிடின் அவனோடு மடிதலே ஏவலர் மேற்கொள்ள வேண்டிய அறம். ஏவலரைத் தேர்ந்தெடுப்பது ஒரு நுண்ணிய கலை, இக்கலையில் தேர்ச்சி பெறாதவரிடம் ஏவலர் கூட்டம் கூட்டமாக இருப்பர். ஆனால், பணிகள் நிகழா. ஏவல் கொள்வோர் எப்போதும் இது நடைபெறவில்லையே; அது நடைபெறவில்லையே; என்று அங்கலாய்த்துக் கொள்வார். அடிக்கடி ஏவலரோடு முரண்படுவார். ஏவலர் முணுமுணுப்பர்; ஏவலர்களும் மனிதர்கள் தாமே! அவரிடம் குணங்களும் உண்டு; குற்றங்களும் உண்டு. ஏவல் கொள்வோர் ஏவலரிடம் உள்ள குற்றங்களை மறக்கவேண்டும். அவரிடமுள்ள குணங்களைக் கண்டு கொள்ளவேண்டும். அவ்வழி ஏவல் கொள்ள வேண்டும். இஃதொரு செப்பமான வாழ்க்கை முறை,

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்[1]

என்பார் திருவள்ளுவர். ஏவலரைத் தேர்ந்து தெளிந்து ஏற்றுக் கொள்ளவேண்டும். தெளிந்தபின் ஐயப்படுதல் அன்பினைக் கெடுக்கும்; உறவினை உருக்குலைக்கும். பணிகளைக் கெடுக்கும்; பகையை மூட்டும். ஆதலால் ஏவலரைத் தெளிந்தபின் ஐயம் கொள்ளுதல் கூடவே கூடாது.

தேரான் தெளிவும் தெளிந்தன்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்[2]

என்பார் திருவள்ளுவர்.

  1. திருக்குறள் 504
  2. திருக்குறள் 510