பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

சமயக் கட்டுரைகள் பொதிந்துள்ள இத்தொகுதிகள் வாழ்முதலாகிய இறைவனைப் பற்றிய அடிகளாரின் சிந்தனைப் பதிவுகளைக் கொண்டன. இந்தப்புலம் அடிகளாரின் ஆன்மா விரும்பும் விருப்பமான நிலம், அவர்கள் நாளும் பயணம் செய்யும் ஞானபூமி. ஆதலால் சமயம்பற்றி அடிகள் கொண்ட அனைத்துக் கருத்துக்களின் கருவூலமாக இத்தொகுதிகள் திகழ்கின்றன. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, கோயிலைத் தழுவிய குடிகளும், குடிகளைத் தழுவிய கோயிலும் என்னும் கொள்கை உருவாக்கம் அடிகளாரின் தனிக்கொடை.

தமிழ் இலக்கியம் சமயம் சார்ந்த இலக்கியம். சமணமும் தமிழும். பெளத்தமும் தமிழும் எனப் பகுத்தாலும் இலக்கிய நிலப்பரப்பில், பங்களிப்பில் சைவமும் தமிழும்தான் தனிச்சிறப்பு பெறுகிறது.

அடிகளார் சிவநெறியினைச் சிரத்திலும் சிந்தையிலும் வைத்துப் போற்றிக் கூறிய, எழுதிய கருத்துக்கள் சைவ சமயத்திற்குப் புத்துணர்வையும், புத்தொளியையும் நல்குவன. புரட்சித் துறவியாகிய அடிகளாரின் புதிய பார்வை திருமுறைகளை மறுமைக்கு மட்டுமின்றி இம்மைக்கும் வழிகாட்டும் என நிறுவுவன. மனிதனை மேம்படுத்தும் எண்ணங்களை, சீரிய செவ்வறங்களைக் கூறுவன திருமுறைகள்.

அடிகளார் அப்பரடிகளிடம் கொண்ட அன்பு அளவிடற்கரியது. நாவுக்கரசர் காட்டிய நல்லறங்களை நாளும் சொல்லி மகிழ்பவர். எட்டாந் திருமுறை ஆகிய திருவாசகத்தை எண்ணி எண்ணி எப்போதும் இறும்பூது எய்துபவர். சேக்கிழார் இயற்றிய 12ஆம் திருமுறையாகிய திருத்தொண்டர் புராணத்தை நிகழ்கால சமூக வாழ்க்கையோடு இயைத்துக்காட்டி, சைவ சமயம் என்பது தமிழர் வாழ்க்கை நெறி என்பதை ஒல்லும் வகையெலாம் உணர்த்தியவர்.

கோயிற் பண்பாடு என்னும் கோட்பாட்டை விளக்குவதில் அடிகளார் முதல் வரிசையர். சைவ சமய, தோத்திர, சாத்திர சரித்திரக் கருத்துக்களில் ஆழங்கால் பட்டவர். பரந்துபட்ட தமிழ்நூற் பயிற்சியும் வாழ்வியல் அனுபவங்களும் இத் தொகுதிகளில் ஒளி வீசுகின்றன.

இறைவன், பிறவித்துன்பம், வினைக் கொள்கை,ஊழ் உண்மை, ஓதி உணர்தல், புலனடக்கம். மெய்ப்பொருளை உணர்தல், விண்ணும் மண்ணும், வீட்டுலகம் முதலியன பற்றி அடிகளார் கூறிச் செல்லும் கருத்துக்கள் ஆழ்ந்த சிந்தனைகளின் வெளிப்பாடு.

அடிகளார் தெளிவுற அறிந்திடுதல், தெளிவுற மொழிந்திடுதல் என்ற இரு நிலையிலும் சிறப்பாக விளங்கியவர் என்பதனை இத்தொகுதிகள் பறைசாற்றுகின்றன. இலக்கியக் கட்டுரைகளாயினும் சரி. சமயக் கட்டுரைகளாயினும் சரி அடிகள் மனித குல மேம்பாடு ஒன்றிற்கே உயர்வளிப்பவர் என்பது விளங்கும்.