பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


- காதலின்பம் நிறைந்த வாழ்க்கையைத் துன்பமாக்க முனைந்த சமணர்களை அவர் எதிர்த்துப் பெற்ற வெற்றி அம்மம்ம...! இன்றைய திருக்கோயில்கள் அந்த வெற்றியை வழங்காமலிருக்கலாம்; மடாலயங்கள் மறந்திடலாம்; ஆனால் மெள்ளத் தென்றலிலே மிதந்துவரும் இசை, அப்பரடிகளின் புகழை இசைக்கிறது. வசந்தத்திலே மலர்ந்து மணம் வீசும் மலர்களிலே மகிழ்ச்சி வெள்ளம், அந்த இயற்கை வெள்ளம் “சொல்லுக்கு வேந்தனாக” நிற்கும் அவர் புகழை வாழ்த்துகிறது. உலகெலாம் உடல் வேறாக - உயிர் ஒன்றிக் காதலித்து உயரின்ப நிலையில் வாழ்ந்திடும் காதலர்களின் இன்ப வெள்ளம் திருநாவுக்கரசரின் புகழைப் பாடிப் பரவுகிறது. இந்தச் சாதனைகளுக்கு அப்பரடிகள் பெற்ற இடுக்கண்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, பலப்பல. ஆனாலும் அவர் இடுக்கண்களைக் கண்டுழி நிற்காமல் பணிகளைத் தொடர்ந்தார்; வெற்றியும் பெற்றார். வையகத்தார்க்கு இன்பம் தந்தார். அதுவே வாழும் வழியென்பது வள்ளுவர் தந்த பாடம்.

செய்க பொருளை

உயிர், நமது சமய நெறிப்படி துய்த்தலுக்குரியது. அதற்குத் துய்க்கும் வலிமை இயல்பானது. இறைநிலையிலும் கூட அது திருவருளைத் துய்க்கும் உரிமையுடையது. உலகில் வாழப் பிறந்த மனிதன், துய்த்தல் வேண்டும்; துய்ப்பதற்குரிய பொருள்களைப் பெறவேண்டும். துய்ப்பில்லாதவர் வாழ்க்கை, தூரில்லாத மரம் போலக் கெடும். அதனா லன்றோ “துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ”[1] என்றார் அப்பரடிகள். இம்மையே தரும் சோறும் கூறையும்"[2] என்பது சுந்தரர் வாக்கு “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை”[3] என்பது வள்ளுவர் வாய்மொழி. இங்குப் பொருள் என்பது அணிந்து அல்லது எண்ணிச் சேமித்து மகிழும் - முழுமையாகத் துய்த்தற்குப் பயன் தராத - தங்கம், வைரம், முத்து முதலியனவல்ல; இக்கால நாணயங்களுமல்ல.

  1. திருநாவுக்கரசர் - ஆறாந்திருமுறை-929,
  2. கந்தரர் - ஏழாந்திருமுறை-340.
  3. திருக்குறள் - 247.