பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

119


பொருள் என்பது உயிர்கள் முழுமையாகத் துய்த்து மகிழ்தற்குரிய பொருள்களேயாம்; உண்டு, தின்று மகிழ்தற்குரிய பொருள்கள் இல்லையானால் உயிர் உடலோடு கூடி வாழ்தலரிது. அதனாற்றானே “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்”[1] என்ற வழக்கு தோன்றிற்று. ஆதலால் உடற் பிணியும், அவ்வழி உயிர்க்குச் சோர்வும் வராது வாழ்ந்திட விரும்பும் மனிதன், பொருள்களைச் செய்து குவிக்க வேண்டும். உண்டு, தின்று துய்த்திடும் பொருள்கள் உடலுயிர்க் கூட்டு வாழ்க்கைக்கு இன்றியமையாதன. ஆனால், உணவுகளால் மட்டும் மனிதன் உயிர் வாழ்ந்து விடுவதில்லை. ஒரோ வழி வாழ்வது போலத் தோன்றினாலும் உடலில் சதைகள் வாழுமே தவிர உயிரியல்புகள் வாழ்வதில்லை.

அன்பு

உயிர் துய்த்துத் தளிர்த்து மகிழ்ந்து வாழ அன்பு தேவை. அன்பின் வழியல்லது உயிரில்லை; இருந்தாலும் இல்லை என்பதே திருவள்ளுவர் கருத்து.

அன்பின் வழியது உயிர்நிலை! அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு[2]

என்பார் திருவள்ளுவர்.

அன்பு, உள்ளத்தில் ஊற்றெடுக்க வேண்டும். புலன்களில்-பொறிகளில் பொதுள வேண்டும். ஊற்றெழும் அன்பு, தடையின்றி மற்றவர்கள்பாற் பாயவேண்டும்; புயல் சுமந்த வான், மழையைப் பொழிந்தாலே அதற்கு விடுதலை; இன்பம்; வாழ்த்து கருவுற்ற தாய் ஈன்று புறந்தரலே அவளுக்கு விடுதலை, இன்பம்; தாய் என்ற பெயர்; பாராட்டு, பாதுகாப்பு: வாழ்த்துக்கள். அதுபோல் மனிதன் அன்புள்ளத்தைப் பெற்று மற்றவர்க்கும் காட்டுதல் மூலமே வாழ்வான். தன்னைப் பற்றிய கவலையினின்றும் விடுதலை பெறுவான்.

  1. புறம்-18,
  2. திருக்குறள்-80