பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

121


திருவுருவங்களுக்குள் - கருவறைக்குள் அடைப்பித்துக் கொண்டான். ஏன்? உயிர்களிடத்து அன்பினை ஆரத்துய்க்க! உயிர்களுக்குத் தம் அருளை வழங்கித் துய்த்து வாழ்வித்திட! நம்பியாண்டார் நம்பியின் நிவேதனத்தைச் சுவைத்தவன் - கண்ணப்பர் மெள்ள வாயில் அதுக்கிச் சுவையுண்டாக்கிப் படைத்த புலால் உணவையும் விரும்பி வேட்டவன் - அரி வாட்டாயர் தந்த மாவடுவைக் கழனிகளின் வெடிப்பில் தங்கிச் சுவைத்த தயாபரன் இன்று ஏன் திருக்கோயிலில் உண்ணவில்லை? அன்று அவர்கள் படைத்தவைகளைவிட விலை மிகுதியுடைய பண்டங்களாய் இருந்தாலும் ஏன் உண்ணவில்லை? மறைவாகச் சுவைத்து உண்ணத் திரை இருந்தும் ஏன் சுவைக்கவில்லை? இறைவன் சுவைக்காதது ஏன்? என்று நினைந்து அழுவார் இல்லாது போயினர். அது ஒரு தவக்குறை. இறைவன் “தாயினும் நல்லான்'; தாயிற் சிறந்த தயாவுடையான். உலகத்தில் நடமாடும் குறைகளும் நிறைகளும் உடைய தாய் கூட, தான் ஈன்ற குழந்தை பசித்திருக்க உண்ணமாட்டாள். அங்ஙனம் இருக்க அண்ட மெலாம் பூத்தவளாக - பூத்தவண்ணம் காப்பவளாக விளங்கும் கடவுளாகிய தாய் “உலகத்தில் கோடானுகோடி உயிர்கள் உண்ணாமலிருக்கிறார்கள்; அவர்கள் அனைவரும் உண்ணும்வரை உண்ணமாட்டேன்” என்று தவம் கிடக்கிறாள். அவள் தனக்குவமையில்லாத் தாய். ஆனாலும் கடவுளைப் பற்றிக் கவலை படாதவர்கள், கடவுளைப் பிழைப்புப் பொருளாக்கிக் கொண்டவர்கள் வழக்கம் போல வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆதலால் மனித வாழ்க்கைக்கு உயிர் நிலை அன்பேயாம். அன்பே துன்பத்திற்கு மாற்று. அன்பே இன்பத்திற்கு வித்து. அன்பே ஆக்கத்துக்கு வழி. அன்பில் இழப்பதும் ஆக்கமேயாம் இத்தகைய உயர்ந்த அன்பு நெறியில் மனிதனை வழி நடத்தி வளர்க்கிறார் வள்ளுவர். அன்பு நெறியே நமது சமயத்தின் உயரிய தவம்.