பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

123


டான். ஏற்புழி வடுப்படா வண்ணம் குற்றங்களைத் திருத்துவான். மாணிக்கவாசகரின் “பையத் தாழுருவி” என்ற சொற்றொடர் நினைந்து நினைந்து இன்புறற்பாலது. இறை வழி பாட்டுநெறியில் தோழமை நெறியும் ஒன்று. நமது சமயம் அச்சத்தில் பிறந்ததன்று அன்பில் பிறந்தது; அறிவில் தோன்றியது; நன்றிப் பெருக்கில் பிறந்தது. ஆதலால் கடவுளிடத்து அச்சத்தை வளர்ப்பதில்லை-கடவுளிடத்துத் தோழமையைக் கொள்ளத் துாண்டி வழிநடத்துவது. கடவுளும் விரும்பும் நல்ல நட்பைத் தேடிப்பெறுக என்று வழி நடத்துகிறார் வள்ளுவர்.

இல்லறம்

மனிதன் என்னதான் அறிவைப் பெற்றாலும், அரிய நட்பினைப் பெற்றாலும் சில காலம் கடந்தபிறகு அவன், வாழ்க்கையில் ஒரு வெறுமையை உணர்கிறான். அவன் அன்புடையவனாகிப் பலர்க்கு அன்பினை வழங்குகிறான். அதேபொழுது தன்னிடம் அன்பு காட்டுகிறவர்களை எதிர் நோக்கியே இருக்கிறான். அங்கேதான் மனிதன் இல்லறத்தை நாடுகிறான் இல்லறம் உயர்ந்ததா? தாழ்ந்ததா? என்ற விவாதம் நம்முடைய சமயத்தில் இல்லை. நம்முடைய சமயம் இல்லற நெறியை ஏற்றுப் போற்றுகிறது. ஏன் இறைவனையே சிறந்த இல்லறத் தலைவனாகக் காட்டுகிறது நம்முடைய சமயம். நம்முடைய தொன்மைக்கால வழிபாட்டுத் திருமேனி, அம்மையப்பன் திருமேனியேயாம், அம்மையப்பன் திரு மேனியைத் “தொன்மைக் கோலம்” என்று திருவாசகம் போற்றுகிறது.

தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்கவளை யும்உடைய தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பி[1]

  1. திருவாசகம், திருக்கோத்தும்பி, 18,