பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

127


அவர் ஓதியது என்ன? கூடி வாழ்க, அதுவே நன்மக்கட் பேற்றுக்குரிய வழி என்றுதான் ஓதியிருக்கவேண்டும்.

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற[1]

அடேயப்பா! வள்ளுவர் பல இடங்களில் இப்படிச் சொல்லியிருக்கிறார். அதுதான் அவரியல்பு போலும் என்று கருதுதல் கூடாது. உண்மையிலேயே இதுவரையில் மனிதன் கடந்து வந்துள்ள வாழ்க்கையின் சாதனைகளையும் அவன் அடைந்துள்ள குணங்களையும் அவனுள்ளத்து இயல்பினையும் ஒளிக்காமல் மறைக்காமல் உருக்காட்டுவது அவனுடைய மக்கட்பேறேயாம். தகுதி வாய்ந்த மக்களாக இல்லாது போனால் அவனுடைய அறிவில் குற்றம் காண்பிக்கப்பெறும். அவனுடைய குணங்கள் பழிக்கப்பெறும். அதுமட்டுமன்று. அவன் குற்றமுடையவனாக இருந்து தந்தையாகாமல் இருந்திருப்பானால், ஒரு தலைமுறையோடு அக்குற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பெறுகிறது. தகுதியில்லாத மக்களை ஈன்று புறந்தருதல் மூலம் அடுத்த தலைமுறைக்குத் துன்பச் சுமையினைத் தருபவனை வையகம் எப்படிப் போற்றும்? உலகத்தில் நல்லவன் என்ற பெயரைக்கூட எளிதில் பெற்று விடலாம். ஆனால் நல்ல தாய், நல்ல தந்தை என்ற பெயரை அவ்வளவு எளிதிற் பெற இயலாது. அவனுடைய இயல்புகளாலேயே அவன் நல்ல தந்தை என்று பாராட்டப் பெறுவதில்லை. அவனுடை மக்கட் பேற்றின் குணங்களைப் பொறுத்தே அவன் நல்ல தந்தையென்று பாராட்ட பெறுகிறான்.

மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்[2]

என்று திருக்குறள் பேசும். சேக்கிழார், அப்பூதியடிகள் வரலாற்றில் மூத்த திருநாவுக்கரசு வாயிலாக, “நல்ல தாய் தந்தை ஏவ நானிது செய்யப் பெற்றேன்”[3] என்று

  1. திருக்குறள், 81.
  2. திருக்குறள், 70.
  3. திருத்தொண்டர்புராணம், அப்பூதியடிகள், 24