பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

129


குறிப்பே இக்குறளிலும் கூறப்படுகிறது. அந்த அதிகாரங்களில் இந்தக் குறளை ஓதாமல் கொல்லாமை அதிகாரத்தில் வைத்தது ஏன்? வாழப் பிறந்த ஓருயிரை உணவளித்து வாழ்விக்காமல் சாகவிடுதலும் ஒருவகையில் கொலையே என்ற கருத்தில் இந்தத் திருக்குறள் கொல்லாமை அதிகாரத்தில் வைக்கப் பெற்றுள்ளது. பகுத்துண்ணும் பண்பு தழீய பழக்கம் பாரினில்-வையத்து மாந்தரிடத்தில் வராததினாலேயே திருக்கோயிலுள் எழுந்தருளியிருக்கும் இறைவன் உண்ண மறுத்திருக்கிறான். அவன் சந்நிதியில் இடப் பெற்றிருக்கும் திரை வஞ்சிக்கப்பட்ட மக்களைப் பாராதிருப்பதற்காக என்பதை அவன் திருவுள்ளம் அறியாதா என்ன? பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் நெறியே பரமன் நெறி. அந்நெறி நின்று ஒழுகுவோரே ஒழுக்கத்தின் நெறி நின்றவராவர்.

மனிதன் தான் பிறந்த குடியை வளர்க்க வேண்டும். அப்பொழுதுதான் அவனும் நிலையாக வாழ முடியும். அவனுடைய குடும்பமும் வாழும். எனவே மனிதனைச் சமூக மனிதனாக வள்ளுவர் மாற்றி வளர்க்கிறார். தனி மனிதனைச் சமூக மனிதனாக மாற்றும் பொழுது ஈதற் பண்பாட்டை எடுத்துக்காட்டுகின்றார்; ஒப்புரவறிதலை ஓதிக் காட்டுகின்றார். இவ்விரண்டு அறங்களும் சமுதாயத்திற்குத் தனி மனிதனால் செய்யப்பெறுபவை. மாறாக அவன் சமூகத்திலிருந்து புகழைப் பெறுகிறான். மனைவி, கணவனைப் பாராட்டுவது புகழாகாது. கணவன் மனைவியைப் பாராட்டுவது புகழாகாது. நண்பர்கள் பாராட்டுவது புகழாகாது. உண்மையான புகழ், பகைவர்களாலும் பாராட்டப் பெறுவதுதான். சூரபதுமன் செருக்களத்தில் அண்ணல் அறுமுகச் செவ்வேளைப் பாராட்டுகிறான்; போற்றித் துதிக்கிறான். இதுவே புகழ் தலையாய புகழ், பொதுவான அயலவரும் புகழலாம். சமுதாயம் தலைமகனைப் பாராட்டுவதுதான் புகழ். எனவே தனிமனிதனைச் சமுதாயத்தில் ஈடுபடுத்திச் சான்றாண்மை யுடையவனாக்கிப் பண்புடையவனாக்கிப் புகழுக்குரியவனாக்குகின்றார்.