பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அரசு

இவ்வளவும் தனி மனிதன் உடன்பாட்டு முறையில், தானே வளர்ந்த பயணம். கழனியில் வேளாண்மை செய்யத் தொடங்கும் பொழுது காவல் தேவையில்லை, பயிர் வளர்ந்த பிறகு காவல் தேவை. எனவே தனி மனிதனும் சமுதாயமும் இணைந்து வளரும் வழி, புலித்தோல் போர்த்த பெற்றங்களும் இடையில் தோன்றி விடுவதுண்டு. அத்தகைய வல்லுருவங்களிலிருந்து சமுதாயத்தைக் காப்பாற்ற வலிமையான காவல் தேவைப்படுகிறது. கண்ணோட்டமில்லாத காவல் தேவைப்படுகிறது. அந்தக் காலத்தில்தான் வள்ளுவர் மனிதனுக்கு அரசைப் படைத்துக் காவலாக்குகிறார். அக்காவல் காவலுக்காக ஏற்பட்டதன்று. காவற்காரர்களுக்காகவும் ஏற்பட்ட தன்று. இன்றைய நிலையில், ஏன் இடைக்காலத்திலும் கூட வரலாற்றிலும் கூட மக்களுக்காக ஏற்படுத்தப்பெற்ற காவல் தன்மையுடைய அரசுகள் காவல் தன்மையை இழந்து, மக்களுக்கே துன்பம் செய்பவைகளாக உருமாறி விட்டன. அதனால்தான் போலும் ஆள்வோர் ஆளப்படுவோருக்குக் காவல் செய்யத் தவறியதால் ஆள்வோர் தமக்குக் காவல் அமைத்துக் கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டது, வள்ளுவர் வகுத்தத் தந்த அரசு குடிதழுவிய அரசு முறை செய்து காப்பாற்றும் நல்லரசு, ‘பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும்[1] என்ற பொது நெறியில் மக்களைக் காப்பாற்றுவதே அரசு.

துறவு

இங்ஙனம் நல்ல அரசு அமைந்துவிட்ட போதிலும் மனிதன் அவனிடம், ஏதோ ஒரு இல்லாமையை உணர்கிறான். தவம் செய்தவன்தான். ஆனால் மேலும் மெய்யுணர்வு ஆர்வம் அலை மோதுகிறது. ஆதலால் அவனுடைய தகைமை சான்ற மகனிடத்தில் உடைமைகளை ஒப்படைக்கின்றான். அப்பரடிகள் கூறியது போலத் துணையாய் நின்று துறப்பிக்கும் திருவருளை நினைந்து

  1. திருக்குறள், 972.