பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சுவைத்தற்குரியவாறு பக்குவப்படுத்தும் செயல்முறை “அவித்தல்” நெல் அவித்தல்; கிழங்கு அவித்தல் ஆகிய சொல் வழக்குகள் ஒப்புநோக்கி எண்ணத்தக்கன. இயல்பாகத் தற்சார்புடைய வேண்டுதல் வேண்டாமை, அலைவழிப்பட்டுக் காமம், வெகுளி மயக்கங்களில் சிக்கி, ‘யான்’, ‘எனது’ என்ற செருக்கால் சுவை இழந்து, அசுரநிலையை அடையாமல் இறைவனுடைய திருவடிகளை நினைந்து நினைந்து பணிவுடைமையைப் பண்பாகக் கொண்டு, மகவெனப் பல்லுயிரையும் ஒக்கநோக்கிப், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பி வாழ்வோர் இறைவன் திருவடியை எளிதில் எய்துவர். இல்லை, அங்ஙனம் வாழ்வோர் மனத்தில் இறைவன் எளிதில் வந்து தங்குவான். அந்த நிலையே வீடு பேறு உடற் களைப்பு நீங்க, உறங்கி மகிழ, உலகியல் வீடு துணை செய்கிறது. அதுபோல் எல்லாப் பிறப்பும் பிறந்து எய்த்து இளைத்த உயிர்க்குத் தங்கி இன்புறும் வீடு இறைவன் திருவடியே. உலகியல் வாழ்க்கையில் சொந்த வீடில்லாதார் படும் அல்லல் எவ்வளவு? அதுபோலப் பல்வேறு பிறப்புக்களை அடைந்து துயருறும் இந்த உயிர், இன்ப அன்பினில் நிலையாகத் தங்கியிருக்கும் வீடு திருவடியே. இந்த வீடு பெறாதாரை இரக்கமுடன் நோக்குகிறார். “சின்னஞ்சிறு வீட்டில் ஐவரோடு கூட்டுக் குடித்தனம் செய்யும் உயிரை நோக்கி உயிருக்கு இன்னமும் புகுந்து நிலையாகத் தங்கியிருக்கும் வீடு கிடைக்கவில்லையோ” என்று கேட்கிறார்.

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு[1]

என்பது குறள். இங்ஙனம் உயிர்கள் நிலையான இன்ப அன்பினில் திளைத்து மகிழும் திருவடிப் பேற்றினை உணர்த்திய திருக்குறள் மறை வாழ்க! வையம் வாழ்க!

கடவுள் வாழ்த்து

பிறவி, இன்பமே ஆனாலும் கடலேயாம். கடலில் குளித்தல் சிலபொழுது மகிழ்ச்சி. ஆனால் தொடர்ந்து கடலில் கிடத்தல்

  1. திருக்குறள் 340,