பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கியலாது. இந்திய தத்துவ-நீதி நூல்களுள் மிகவும் விழுமியது திருக்குறள் என்று ஆல்பர்ட் சுவைட்சர் கூறியுள்ளார். உமாபதி சிவமும் ‘மெய்வைத்த சொல்’ என்று பாராட்டுகிறார். ஆதலால் நமது மறை திருக்குறளே!

மறை நூலுக்குரிய இயல்புகள் அனைத்தும் திருக்குறளுக்குப் பொருந்தியிருக்கின்றன. கடவுள், உயிர், உயிரைப் பற்றிய அறியாமை, உயிர்பெற வேண்டிய அறிவு வாழ்க்கைப் பயணம், இன்ப துன்பம், வீடுபேறு ஆகிய அனைத்தும் திருக்குறளில் பேசப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி சமய வாழ்வுக்குரிய உண்மைகளோடு மட்டுமன்றி உலகியல் நெறியும்-அரசியல் நெறி, பொருளியல் நெறி, படை நெறி ஆகியனவும் விரிவாகக் கூறப்பெற்றுள்ளன. மனித குலத்திற்குத் தேவையான உணவு, மருந்து ஆகியனவும் எடுத்தோதப் பெற்றுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தனி மனிதன் எவ்வண்ணம் வளர வேண்டுமென்பதை ஒரு சிறந்த நல்லாசிரியன் எடுத்துக் கூறுவதைப் போலப் படிமுறையில் நூல் அமைந்திருக்கிறது.

தனிமனிதன், கல்வி கேள்வி வழி அறிவு பெற்று, அவ்வழி அன்பு பெற்று, ஆள்வினை - ஆற்றல்பெற்று, செயற்கரும் செயல்கள் செய்து, நட்பினை நாடிப் பெற்று, வாழ்க்கைத் துணையடைந்து நன்மக்கட் பேற்றினைப் பெற்று அவனை முறையாக நன் மகனாக வளர்த்து நாட்டிற்கு அளிக்கச் செய்து தவம் - நோன்பு ஏற்கும் வரையில் திருக்குறள் அவனை அழைத்து வருகிறது. தனி மனிதனை அவன் நிலையில் வளர்த்துக் குடும்பத் தலைமகனாக வளர்த்து ஒப்புரவு நெறி கொண்ட சமுதாயத் தலைமகனாக வளர்த்து, அவன்மூலம் நல்லாட்சியமைத்து நாட்டுக்குப் பெருந்தொண்டு செய்கிறார் திருவள்ளுவர். திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல். வாழ்க்கையில் மலர்ந்த மறை. அது வாழ்க்கையை வழி நடத்திச் செல்வது. திருக்குறள் மறைவழி வாழ்வோம்! வள்ளுவத்தின் வழி வையகத்தை வாழ்விப்போம்!