பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

143


தென்குமரிக் கண்ட நாகரிக காலத்திலேயே அம்மையப்பன் வழிபாடு இருந்தது” என்று கூறுவர். (தமிழர் மதம்) சிவம், பொருள்; அம்மை அப்பொருளின் இயங்கும் ஆற்றல். இந்த அடிப்படையிலேயே அம்மையப்பன் வழிபாடு தோன்றியது. குணம் குணமல்ல அப்பனும்-அம்மையும் உண்டு என்று கூறுவோரும் உண்டு. திருமறை-திருக்கோவில்களில் அப்பன் அம்மை என்று போற்றப் பெறுகின்றனர்.

சங்ககால இலக்கியங்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடிச் சேர்ந்த, பாரதம் பாடிய பெருந்தேவனார், புறநானூறு, ஐங்குறுநூறு ஆகிய இலக்கியங்களுக்கு அம்மையப்பன் வழிபாட்டை உணர்த்தும் பாடல்களாகப் பாடிச் சேர்ந்துள்ளார். வரலாற்றுக்கு முந்திய காலத்திலும் தொடக்க காலத்திலும் பெண்மை பெருமதிப்புப் பெற்றிருந்தது. காலப் போக்கில் பெண்மை, தகுதி நிலைகளை இழந்த பொழுது அம்மையப்பன் வழிபாடு வற்புறுத்தப் பெற்றிருக்கலாம் என்று கருத முடிகிறது.

தமிழ் இலக்கியங்களானாலும் நூல்களானாலும் தனித்தமிழ் மரபில் தோன்றியவைகள், பெண்மையை இழித்துப் பேசியதில்லை. ‘வீடுபேற்றுக்கு மனையறம் தடையானது’ என்று ஒருபோதும் தமிழ்நெறி சாற்றியதில்லை. ஆதலால் அருவ நிலையில் வளங்கி வந்த சிவவழிபாடு உருவ வழிபாட்டுக்கு வந்தவுடன் முதல் நிலையில் இலிங்க வழிபாடாகவும் இரண்டாம் நிலையில் அம்மையப்பன் வழிபாடாகவும் மலர்ந்தது. இது,

பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்

(புறம்; கடவுள் வாழ்த்து; 7-8)

என்ற புறநானூற்றுக் கடவுள் வாழ்த்தில் கூறப்படுகிறது.