பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பொருள்கள் மூலம் புலனாகின்றன. “சிவவழிபாட்டின் மிகச் சிறந்த வழிபாடாகிய இலிங்கவழிபாடு வரலாற்றறிவுக்கும் அப்பாற்பட்ட பழைமையுடையது; கற்காலத்திற்கும் முந்தியது. இப்பொழுது உலகிற் காணப்படும் சமயங்கள் எல்லாவற்றிற்கும் அது முற்பட்டது” என்று சிந்துவெளிப் புதைபொருள் ஆராய்ச்சி அறிஞர் சர்ஜான், மார்ஷல் கூறுகிறார். இந்தச் “சிவவழிபாடு உலகம் முழுதும் பரவியிருந்தது; சிவவழிபாடு இங்கிலாந்து முதல் ஜப்பான் வரையில் பரவியிருந்தது” என்பார் எச். ஜி. வெல்ஸ்.

தமிழ் தொன்மையான மொழி, இலக்கிய நலம் சிறந்த மொழி, இலக்கண வளம் மிக்க மொழி, தமிழ் மொழியைப் பேசி வாழ்ந்த மக்கள் நாகரிகத்திற் சிறந்து வளர்ந்தவர்கள். உலகின் மற்ற நாகரிகங்களுக்கெல்லாம் தொட்டிலாக அமைந்தது தமிழர் நாகரிகமேயாம். இதற்குச் சான்றுகள் எங்கேயும் தேடி அலைய வேண்டியதில்லை.

தமிழர்த்ம் சிந்தனையிற் சிறந்து, வாழ்க்கையில் விளக்கமுற்று விளங்கிய கருத்துக்களை விளக்கும் இலக்கிய இலக்கணங்களே சான்று. இன்று நிலவும் தமிழ் நூல்களில் பழைமையானது தொல்காப்பியம். இது தோன்றிய காலம் கி.மு.3000க்கு முந்தியது என்று சிலரும் கி.மு.5000க்கு முந்தியதென்று சிலரும் கூறுவர். எப்படியாயினும் கிறித்து பிறப்பதற்கு முன்தோன்றிய மூத்த நூல் என்பது உறுதி.

தொல்காப்பியம் இலக்கண நூல். செழிப்பான இலக்கியங்கள் தோன்றிய பிறகுதான் இலக்கணம் தோன்றும் என்பது மொழிநூற் கருத்து தொல்காப்பியம் போன்றதொரு செப்பமான இலக்கண நூல் தோன்றுவதற்கு முன்பு இலக்கியம் சிறந்து விளங்கியிருக்க வேண்டும் என்பது ஒருதலை. தொல்காப்பியம் மொழிக்கு மட்டும் இலக்கணம் பேசவில்லை, மொழியைப் பேசும் மக்களின் வாழ்க்கைக்கும் இலக்கணம் செய்தது. இதுபோல் உலகில் வேறு எந்த