பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

147


மொழியிலும் மொழியைப் பேசும் மக்கள் வாழ்க்கைக்கு இலக்கண நூல் இலக்கணம் கூறப்பெறவில்லை. ஏனோ, தானோ என்று வாழ்வது வாழ்க்கையன்று. வையத்து வாழ்வாங்கு வாழ்வதே வாழ்க்கை. இந்த உணர்வில் ஓர் இனம் வளர்ந்திருக்குமானால் அந்த இனத்தின் தொன்மை மிகமிகப் பழமையானது என்பதை ஆராய அகழ்வாராய்ச்சிகள் தேவைப்படா.

தொல்காப்பியம் தோன்றிய பிறகும் வாழ்க்கை முழுமையுறாத நிலையில் மேலும் வளர்த்துச் செழுமைப்படுத்தத் திருக்குறள் தோன்றியது. தொல்காப்பியத்தில் சித்தாந்த சமயக் கருத்துக்கள் பயின்றுள்ளன.

நிலத்தைப் புரிந்து நிலத்திற்குரிய வழிபாட்டுப்பொருளை உணர்த்துகிறது.

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்எனச்
சொல்விய முறையாற் சொல்லவும் படுமே

(தொல். அகத்திணை, நூற்பா.5)

இந்நூற்பாவில் சேயோன் என்று குறிப்பிடப் பெறும் கடவுள் முருகனே என்பது பெரு வழக்கு. ஆனால் காலத்தின் பின்னணி, கருத்து வளர்ச்சிகளின் படிநிலைகள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு நோக்கும்பொழுது சிவ வழிபாட்டின் தொடர்ச்சியாக முருகன் வழிபாடு சங்க காலத்தில்தான் தோன்றியிருக்க வேண்டும் என்பது பெறப்படும். சிவன் தந்தை பார்வதி தாய், முருகன்பிள்ளை என்ற கருத்துக்கள் பிற்காலத்திய பெளராணிகக் கருத்துக்கள். சேயோன் என்பதைச் சேய், சேயன், சேயான், என்று பகுத்துப் பொருள் கொண்டால் செந்நிறத்தான் என்று பொருள்படும்.