பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சேயோன் என்ற சொல்லுக்குச் சிவன் என்றும் பொருள் உண்டு. ஆதலால் “சேயோன் மேய மைவரை உலகமும்” என்பதற்குச் சிவபெருமான் உறையும் மலை நிலம் என்றே பொருள். ஆதலால், தொல்காப்பியத்தில் சிவநெறிக் குறிப்புக்கள் உண்டு. அதோடு, தொல்காப்பியத்தின் தமிழ் நெடுங்கணக்கு முறை வைப்பு சிவநெறிக் கருத்துக்களுக்கு அரண் செய்வனவாக உள்ளனன.

உயிர் எழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய் எழுத்து என்ற இலக்கண வைப்புக்கள் சிவநெறியின் சீர்மைகளை விளக்கும் இயல்பின. இதுபற்றித் தத்துவத் தலைப்பில் பேசும் பொழுது ஆராயலாம். தொல்காப்பியத்தில் தெளிவாகச் சிவம் சைவம் என்ற சொற்கள் பயிலப்படவில்லையானாலும் சிவநெறியின் கருத்துக்கள் வந்துள்ளன. கந்தழி என்பது சிவ பெருமானைக் குறிக்கும் தன்மையுடைய சொல்லாகக் கருதப் பெறும். தொல்காப்பியத்தை ஒட்டித் தோன்றிய சங்க காலத்தில் மேலும் சிவநெறி வளர்ந்தது; ஆக்கம் பெற்றது. ஆயினும் சங்க காலத்திற்கூட அது வாழ்க்கையின் நியதியாக விளங்கியதேயன்றி வரையறுக்கப்பட்ட முழு நிலையை எய்தி விடவில்லை.

கடைச்சங்க காலத்திற்கு முந்தியவன் என்று கருதப்படும் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் கொற்றக்குடை முக்கட் செல்வர் நகர்வலம் வருவதற்குத் தாழ வேண்டும் என்று அறிவுறுத்தியதாகப் புறநானூற்றுப் பழம்பாடல் கூறுகிறது.

பணியியர் அத்தைநின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலம் செயற்கே!

(புறம். 6: 17-18)

என்பதறிக முக்கட் செல்வர் என்பது சங்க காலத்தில் சிவன் பெற்ற பெயர். கதிரவன், திங்கள், தீ இம்முன்றும் மூன்று கண்களெனக் கூறுவர். ஆனால் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் சிவன் என்ற சொல் பயிலவில்லை.