பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

155


இந்தக் காலத்தில் ஆண்ட பல்லவர்கள் தங்கள் அரசின் முத்திரையாகச் சிவநெறியின் இலச்சினையாகிய “நந்தி"யை அரசு முத்திரையாகக் கொண்டும், நாணயங்களில் முத்திரையாகப் பதித்தும் ஆட்சி செய்து வந்துள்ளனர். அக்காலப் பல்லவ அரசின், நாட்டுச்சமயமாகவே சிவநெறி இருந்திருக்கும் என்று கருத முடிகிறது. மகேந்திரவர்மன் காலத்தில் பல்லவ நாட்டில் அப்பரடிகளால் தோற்றுவிக்கப்பட்ட தூய சிவநெறி எழுச்சி பல நூற்றாண்டுகளுக்குப் பயன் தந்திருக்கிறது. அந்த எழுச்சியின் ஒளி வீச்சு, தமிழகம் முழுவதிலும் மூன்று பேரரசுகளிடையிலும், ஆட்சியிலும் பரவிப் பயன்தந்தது. மகேந்திரன் பல திருக்கோயில்களை எடுத்துத் திருப்பணி செய்துள்ளான். பல்லவ அரசருள் ஒருவனாகிய பரமேசுவரவர்மன் மாமல்லபுரத்துக் கணேசர் கோயிலில் ஒரு கல்வெட்டு வைத்துள்ளான். அக்கல்வெட்டில் “சிவனுக்கு மேல் தெய்வமில்லை; அவனே முழு முதற் கடவுள்; பிறப்பிலி, ஸ்ரீநிதி. சிவனை உள்ளன்புடன் வழிபடுபவன். சிவனை நினையாதவர் ஆறுமுறை சபிக்கப் பட்டவராவர்” என்று கூறுகிறது.

இராசசிம்மன் கட்டிய காஞ்சி கயிலாசநாதர் கோயில் பெரும் புகழ்பெற்றது. சுந்தரரால் பாராட்டப் பெற்ற காடவர் கோன் கழற்சிங்கனும் பல்லவனேயாவான். இவனை வரலாறு, மூன்றாம் நந்திவர்மன் என்று கூறும். இவன் காலத்தில் செந்தமிழும் சிவநெறியும் சிவத்தொண்டும் பெருகி வளர்ந்தன. பல்லவர்கள் காலத்தில் நாயன்மார்கள் பலர் இருந்திருக்கின்றனர். பொதுவாகச் சொன்னால் இந்தக் காலம் சைவ மறுமலர்ச்சிக் காலம்.

பல்லவ அரசர்களைப் போலவே சோழர்கள் காலத்திலும் சிவநெறி வளர்ந்தது. சோழர் காலத்தில்தான் வடபுல்த்தில் காஷ்மீரம், நேபாளம் முதலிய இடங்களில் திருத்த முற்ற சிவநெறி கால் கொண்டது. சோழ நாட்டில் பாய்ந்து வளப்படுத்தும் காவிரியாற்றங்கரையில் கறைக்