பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கண்டனுக்குத் திருக்கோயில்களை எடுத்தும் சாதாரண நிலையிலிருந்த கோயில்களைக் கற்றளிக் கோயில்களாகப் புதுப்பித்தும் அழகுபடுத்திய பெருமை ஆதித்த சோழனைச் சாரும். சோழப் பேரரசை நிறுவிய முதலாம் இராசராசன் தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயிலை எடுத்தான். இராசராசன் இத்திருக்கோயில் எடுத்ததோடு மட்டுமின்றிச் சிவநெறி வரலாற்றில் நிலையான இடம்பெறத் தக்கதாக திருமுறைகளைத் தொகுத்துத் தமிழ் உலகிற்குக் கொணர்ந்தான்.

பல்லவர் காலத்தில் சிவநெறியாளர் போல வேடங்கொண்டு ஊடுருவிய ஆரியவேத மரபினர், நமது திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும், சுந்தரரும் அருளிச் செய்த தமிழ்மறைப் பாடல்களைக் கண்டு அஞ்சினர்.

தேவார ஆசிரியர் மூவரும் ஆரியவேத மரபினர் பரப்பிய-நடைமுறைக்கு ஒவ்வாத கருத்துக்களை மறுத்து, உய்ர்ந்த சமய வாழ்க்கை நெறியினை நாடு முழுதும் நடந்து சென்று பரப்பினர். அவை நாட்டிலே நடமாடினால் ஆரிய வேதத்தின் கொள்கை இடம் பெறாது என்று அஞ்சிய ஆரியமரபினர் அவைகளை அரும்பாடுபட்டுத் திரட்டித் தொகுத்துத் தில்லைத் திருக்கோயில் அறைக்குள் போட்டுப் பூட்டிவிட்டனர்.

கறைப்பட்ட வாழ்க்கையும், சிறைப்பட்ட மன நிலையும் கொண்ட தமிழினத்தைச் சிறை மீட்கவந்த திருமுறைகள் சிறைப்படுத்தப்பட்டு விட்டன. தேவாரம் பாடிய மூவரும் வந்ததால்தான் திருமுறைகளை எடுத்துச் செல்ல முடியும் என்றார்கள். இதனை அறிந்த இராசராசன் தனது நுண்ணறிவினால் தேவாரம் பாடிய மூவரையும் சிலைவடிவில் கொண்டுவந்து திருமுறைகளை மீட்டான். தமிழர் நெறி இன்றும், என்றும் உயிர்ப்போடிருக்கத்