பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

157


திருமுறைகளைக் கண்டு தந்த இராசராசசோழன் புகழ், என்றும் நின்று நிலவும்.

தேவாரத்தில், இராசராசசோழனுக்கு நிறைந்த ஈடுபாடு. அதனால், தான் வழிபடும் இறைவனுக்குத் “தேவார தேவர்” என்று பெயர் சூட்டினான். தான் எடுப்பித்த தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயிலில் திருப்பதிகம் விண்ணப்பிப்பார் நாற்பத்தெண்மரையும், துணைக்கருவியாளர் இருவரையும் பரம்பரைப் பணியாளராக நியமித்தான். நாள்தோறும் “ஆடல்வல்லான்” மரக்காலால் அரண்மனைப் பண்டாரத்தில் முக்குறுணிநெல் தரவும் ஏற்பாடு செய்தான். அவ்வழி, அப்பெருமன்னன் திருமுறைகளைப் போற்றி வளர்த்த பெருமைக்குரியவனாகிறான்.

இராசராசசோழன் மகன் இராசேந்திர சோழன் தந்தையை விஞ்சிய சிறப்பில் கங்கைகொண்ட சோழிச்சரம் என்ற திருப்பெயரில் பெரிய சிவன்கோயில் எடுப்பித்தான்.

அடுத்து, சோழ அரசர்களில் நீள நினைந்து போற்றக் கூடிய பேரரசன், அநபாயன் என்று சிறப்புப் பெயர் பெற்ற இரண்டாம் குலோத்துங்கன்.

ஆரியம், பெளத்தம், சமணம் ஆகியவற்றின் ஊடுருவல்களால் சமயச் சடங்குகள் பெருகின; பெண்மையை இழிவுபடுத்தும் வறட்சித் தன்மையுடைய துறவு நெறி மலிந்தது; தமிழ்ச் சமுதாய வாழ்க்கையை நலிவடையச் செய்தது.

அந்தக் காலத்தில், “வாழ்க்கையே சமயம், பெண்மை பெருமைக்குரியது; மாந்தரில் சாதிப் பிரிவுகள் இல்லை; காதல் திருமணமே சிறந்தது; மனையற வாழ்க்கை மூலமே வீடுபேறு பெறலாம்; தொண்டு நெறியே உயர்ந்தது” என்ற கொள்கைகளை மேற்கொண்டு வாழ்ந்து காட்டிய அடியார்களின் வாழ்க்கையினைக் கூறுவதன் மூலம் தமிழின வரலாற்றுக்கு ஏற்பட இருந்த சரிவைத் தடுத்து நிறுத்தி,