பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கிடந்த சைவக் கருத்துக்களை மையமாகக் கொண்ட சைவ இலக்கண-சாத்திர நூல்கள் இயற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அது, காலத்தின் தேவையாக இருந்தது. இத் தேவையினைத் திருவருள் துணைகொண்டு மெய்கண்டதேவர் நிறைவு செய்தார்; “சிவஞான போதம்” என்ற அருமையான தத்துவ அளவை நூலை முதல் நூலாக ஆக்கித் தந்தார்.

சிவஞானபோத நூலுக்கு வழி நூலாகத் தோன்றிய, அருணந்தி சிவாசாரியார் இயற்றிய சிவஞான சித்தியார், மிக விரிவாகவும் தெளிவாகவும் சைவ சித்தாந்தச் செந்நெறியை எடுத்து விளக்குகிறது. இதனையொட்டிப் பன்னிரண்டு நூல்கள் தோன்றிச் சாத்திர வரிசையில், பதினான்கு சாத்திர நூல்களாக அமைந்துள்ளன. அவற்றுள் திருவுந்தியாரும், திருக்களிற்றுப்படியாரும், மெய்கண்டதேவருக்கு முன்பே செய்யப் பெற்றன என்று ஒரு கொள்கையும் உண்டு.

அந்தப் பதினான்கு சாத்திரங்களாவன:

1. சிவஞானபோதம் 8. திருஅருட்பயன்
2. சிவஞான சித்தியார் 9. வினாவெண்பா
3. இருபா இருபது 10. போற்றிப் பஃறொடை
4. உண்மை விளக்கம் 11. கொடிக்கவி
5. திருவுந்தியார் 12. நெஞ்சு விடு தூது
6. திருக்களிற்றுப்படியார் 13. உண்மைநெறி விளக்கம்
7. சிவப்பிரகாசம் 14. சங்கற்ப நிராகரணம்

சைவ சித்தாந்த சாத்திரக் காலம், வழி வழியாக வந்த சமய மரபுகளையும், தத்துவ மரபுகளையும் காப்பாற்றித் தந்தது; பிற சமய நெறிகளின் தத்துவங்கள் ஊடுருவிக் கலக்காமல் தடை செய்தது. அங்ஙனம் மெய்கண்டார் அருளிச் செய்த சிவஞான போதத்தில் இல்லாத செய்திகள்-