பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


7. திருஞானசம்பந்தர் ஆதீனம், 8. திருவண்ணாமலை ஆதீனம், 9. நீலப்பாடி ஆதீனம், 10. தாயுமானசுவாமிகள் ஆதீனம் (அன்னப் பேட்டை, 11. சாரமா முனிவர் ஆதீனம், 12. திருச்சி சொர்க்கபுர ஆதீனம், 13. வேளா குறிச்சி ஆதீனம் (திருவாரூர்), 14. வள்ளலார் ஆதீனம், 15 இருளஞ்சேரி ஆதீனம், 16. வரணி ஆதீனம், 17 நாச்சியார் கோயில் ஆதீனம் (வேதாரண்யம்), 18 நிரம்பவழகிய தேசிகர் ஆதீனம் (குடந்தை).

- தொகையகராதி பக்.117.

இத்திருமடங்கள் எல்லாம் அவை தோன்றிய காலத்தில் அருள் ஞானப் பண்ணைகளாகத் தொண்டின் நிறுவனங்களாக விளங்கின. இன்றும் சில திருமடங்கள் விளங்குகின்றன. மேலும் இங்கும் அங்குமாக நாட்டில் பரவலாக நூற்றுக்கணக்கான திருமடங்கள் தோன்றிப் பணிகள் செய்தன என்று ஆங்காங்கு உள்ள திருக்கோயில்களின் கல்வெட்டுக்கள் எடுத்துக் கூறுகின்றன.

ஏழாம் நூற்றாண்டில் மதுரையில் திருஞானசம்பந்தர் தங்கியிருந்த பொழுது உடனிருந்த அடியார்கள் வழித் தோன்றி, இன்றும் நின்று நிலவும்-காலத்தால் மிகவும் மூத்த ஆதீனம் மதுரை திருஞானசம்பந்தர் ஆதீனம். இத்திரு மடத்தில் வழிவழியாகச் சைவத்தின் நுண்பொருள்களை விளக்கும் சமய நூல்கள் செய்த முனிவர்கள் இருந்துள்ளனர்.

மதுரை ஆதீனத்தில் 291ஆவது மகாசந்நிதானமாக எழுந்தருளிய திருவருள் திரு. சோமசுந்தர ஞானசம்பந்த தேசிக பரமாசார்ய சுவாமிகள் சிறந்த சைவ சித்தாந்த ஞானம் கைவரப் பெற்றவர்கள். செந்தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதவும் பேசவும் வல்லவர்கள். ஆவியுலகத்தொடு தொடர்பு கொள்ளுதல், பேசுதல் முதலிய துறைகளில் துறைபோய அனுபவமும் உடையவர்கள். இத்துறையில் அவர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ள புத்தகங்கள் கற்றுத் தெளிதற்குரியன.