பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மாவும் புள்ளும் ஐயறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.
மக்கள் தாமே ஆறறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே. (தொல். மர.28-33)

இந்தப் படிமுறை, அறிவு வளர்ச்சிகளின்பாற்பட்டன.

ஆறறிவுடைய மானுடப் பிறவி அறிவியக்கத்தின் இன்றைய கடைசி எல்லை.

ஆனாலும், ஓரறிவு முதல் ஐயறிவு வரையுள்ள நிலைகளில் உணர்ச்சிகள் இல்லை; செயல் இல்லை; காதல் இல்லை; பிறவியின் பயனாகிய வீடுபேறு இல்லை என்று கூறுதல் உண்மைக்கு மாறானது. இவையெல்லாம் மக்கட் பிறப்பல்லாத பிற உயிர்களுக்கு உண்டு. ஆனால், சில வரையறைகள் இல்லாமற் போகலாம்; செழுமையாக - விளக்கமாகத் தோன்றாமலிருக்கலாம். ஏன்? ஞானத்தின் பயனாகக் கிடைக்கக்கூடிய வீடுபேறுகளும் கூட, செடிகளும், பறவைகளும், விலங்குகளும் பெற்றுள்ளன. “முள்ளிச் செடிக்கு வீடுபேறு கொடுத்த வரலாறும்”, “கரிக்குருவிக்கு உபதேசித்த வரலாறும்”, “சிலந்தியும், யானையும் பூசித்து வீடுபேறுற்ற வரலாறும்” எண்ணத்தக்கன. அவைகளுக்குள்ள ஒரே குறை, செல்லுழிச் செல்வதோடு சூழ்நிலைகளை மாற்றி அமைத்துக் கொள்ளும் ஆற்றல் இல்லாமையும், காரண காரியங்களை ஆராய்ந்து அனுபவத்திற்குக் கொண்டு வரும் தகுதியில்லாமையும் ஆகும். ஆனால் இவையெல்லாம் மானிடனுக்கு உண்டு.

மானிடர் சாதி, துன்பங்களைச் சந்தித்துச் சந்தித்துப் படிப்படியாக வளர்ந்து வருகின்றது. குறையிலிருந்து நிறையும், தீமையிலிருந்து நன்மையும், துன்பத்திலிருந்து இன்பமும் தோன்றுதல்தான் வளர்ச்சியின் படி முறை, இந்த வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்துள்ளவை அறிவு அறியாமை என்பன. இந்த அறியாமை, அறிவிலிருந்தும் தோன்றுவதாகும். ஒன்றை,