பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நியதிகளைக் கண்டுள்ளது; அறநெறிகளைக் கண்டு ஆற்றுப் படுத்தியுள்ளது; நிலவுலகத்தில் நீதி நின்று நிலவ முயன்று பணி செய்துள்ளது. இவை அனைத்தும் வாழ்க்கைப் படிப்பினைகளின் வழியே உருப்பெற்றன. மனித குலத்தை இன்ப நெறியில் ஆற்றுப்படுத்த வாழச்செய்ய அறமும், அறத்தினைச் சார்ந்த நீதியும் தேவை. இவையே இன்ப வாழ்க்கையின் மூலங்கள்; அடித்தளங்கள்; மனிதகுலத்தை அறநெறியில்-நீதி தழுவிய நிலையில் வாழும்படி வலியுறுத்தி நெறிப்படுத்த சமய நெறிகள் தோன்றின; அறந்தழுவிய வாழ்க்கையின் பயன்களை எடுத்துக் கூறின; அறநெறி பிறழ்ந்த வாழ்க்கையால் அடையும் அவலங்களையும் எடுத்துக்கூறி அச்சுறுத்தின; மனித குலத்தில் இயல்பாக அறநெறி பிறழ்ந்த வாழ்க்கைமுறை மேவிய பொழுது-கடவுள் பெயரால்-சொர்க்கம்-நரகம் என்ற முறையில்-முறை பிறழ்வைத் தடுத்து நிறுத்தி-அறநெறியில் நிலை நிறுத்த முயன்றபோது-சமயம் கால்கொண்டது. சமய நெறி தோன்றிய உடன் நல்ல பயன் கிடைத்தது. ஆனால் காலப் போக்கில், சமயநெறி சமுதாயத்தை அறநெறியில் - நீதிநெறியில் நிறுத்தும் ஆற்றலை இழந்தது. அதற்கு மிகுதியும் காரணம் மக்கள் தொகுதிகள் அல்ல. சமயநெறியை மையமாகக் கொண்டு வழிநடத்தத் தோன்றிய சமயம், சமய நிறுவனங்களின் வடிவம் பெற்றதுதான் காரணம். ஒரு இயக்கத்திற்கு, இருக்கும் ஆற்றல் நிறுவனங்களுக்கு இருத்தல் இயலாது; இருக்காது. சமயம் நிறுவனங்களான உடன் சமயத் தலைவர்கள்-அறநெறி புரோகிதர்கள் தோன்றி விடுவர். அவர்கள் மனித குலத்தை மையமாகக் கொண்டு சிந்திப்பதில்லை. தம் சமய நிறுவனம் தற்சார்பு ஆகிய சுழிகளில் சிக்கி அல்லற்படுவர்.

இங்கனம் சமய நெறி இயக்க நிலையில் இருந்து நிறுவனம் ஆகி முடம்பட்டுப்போன நிலையில் மனித குலத்தை நீதிநெறியில் நிறுத்த, சமய நெறி அறநெறியின்