பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

171


சாராத-தொடர்பில்லாத அறநெறியை, நீதியை வலியுறுத்தி நடைமுறைக்குக் கொண்டுவர அரசியல் தோன்றியது. அரசியலின் தொடக்க காலத்திலேயே, சென்ற கால நடைமுறைகளில் ஏற்பட்ட ஏமாற்றத்தின் காரணமாக அறநெறி, நீதி ஆகியவற்றின் அவசியத்தை மிகுதியும் வற்புறுத்த எண்ணி, அறநெறியில் நிறுத்தும் முயற்சிகளை உறுதியாக எடுப்பதற்கு மாறாக நெறி பிறழின் தண்டனை வழங்குதல் என்ற முறையை வழியாகக் கொண்டது. இது கழுதைக்குப் பயந்து புலியிடத்தில் சிக்கியது போலாயிற்று. மாந்தர் நெறி பிறழ்ந்ததோடல்லாமல் அச்சத்திற்கும் ஆட்பட்டனர். அதன் விளைவாகக் காண்பதற்கும், அறிதற்கும் எல்லைகளுடைய அரசனிடத்திலிருந்து தப்ப மறைவாகத் தடம் பிறழ்ந்தனர். ஒட்டு மொத்தமாக வரலாற்றின் பயனை நோக்கில், அறநெறி, நீதிநெறி இவைகளிலிருந்து விலகிச் செல்லும் போக்கே வெற்றி பெற்றுள்ளது. சமய இயலும் அரசியற் சார்புடைய ஆட்சியிலும் போதிய பயனைத் தரவில்லை. இதற்குக் காரணம் சமய நடைமுறைகளில், அரசியல் நடைமுறைகளில் உள்ள குறைபாடுகளேயாம்.

சமயநெறிகளின் படிமுறை வளர்ச்சிகளில் தோன்றிய குறைகளுக்குத் துணை போகாத நிறை நலம் சான்ற சமயத்தை, உலகு துணிவுடன் ஏற்றுக் கொள்ளவில்லை.

நாடு, இனங்களின் காரணமாகவும் பழக்கங்களை விடாப்பண்பின் காரணமாகவும் அறிவு ஆய்வில் ஆர்வமின்மையின் காரணமாகவும் சமய நெறியாளர்கள் கணக்கர்களாக மாறித் தத்தம் எல்லைக்குள் முரண்பட்டு மோதிக்கொண்டு உயர் சமய நெறியின் இயல்பையே கெடுத்து விட்டனர். உலகில் தோன்றிய சமயங்கள் எல்லாமே நன்னோக்கம் உடையனவே நோக்கத்தில் யாதொரு குறையுமில்லை. ஆனால், அனுபவங்கள் வேறுபடத்தானே செய்யும்! படிப்பினைகள் காரணமாகப் பெற்ற பாடத்தில்