பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


செறிவும், செறிவின்மையும் இல்லாமலா போகும். இவற்றை ஒப்பு நோக்கிக் காலத்திற்குக் காலம் உள்ள நெறியை, தேவையான புதுமையை எடுத்துக் கொள்வதற்குச் சமய நெறியாளர்கள் தயங்குகின்றனர். இத் தயக்கங்களின் காரணமாகவே உலகப் பொதுச் சமயம் தோன்றாது போய் விட்டது; உலகளாவிய மனித குலத்தை ஒருங்கிணைக்க முடியாமற் போய்விட்டது. இந்த இனிய பணியைச் சமய நெறியாளர்கள் ஏற்றுச் செய்யாமையின் காரணமாக வாழ்க்கையாகவே இருந்த சமயம், வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஒதுக்கப் பெற்றுவிட்டது. அதுவும் ஒரு சிறு விழுக்காட்டினருக்குத்தான். இன்றைய நடைமுறை உலகில் வளர்ந்துள்ள ஒழுக்கக் கேடுகள், காவல் தன்மைகள், பண்பாட்டுச் சிதைவுகள், போருணர்ச்சிகள் இவைகளை யெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டதால் நடைமுறை உலகத்திற்கும், சமயத்திற்கும் சம்பந்தமில்லை. உலகம் முழுதும், பெரும்பான்மையான மக்கள் வேறுவேறு பெயரில் கடவுளை நம்பி வழிபடத்தான் செய்கின்றனர். சர்ச்சுகளும் மசூதிகளும், திருக்கோயில்களும் உலகம் முழுதும் பரவிக் கிடக்கின்றன. அவைகளில் வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கும் குறைவில்லை. ஆனால் மானிடச்சாதி பகைமை அரிப்பில் உள்ளீடு அழிந்துகொண்டே போகிறது. எங்கு பார்த்தாலும் உலகியலை மையமாகக் கொண்ட சாமர்த்திய விளையாட்டு! இந்தச் சாமர்த்திய உலகில், வேறு உலகைக் காட்டுவதாகச் சொல்லும் மதத் தலைவர்கள் கூட திறமையாகத்தான் ஈடுபடுகின்றனர். அவர்களிடத்திலும் கூட, விளையாட்டுக்கள் நிர்வாணமான விளம்பரப் போக்குகளாகக் காணப்படுகின்றன.

உப்பு நல்லதுதான். ஆனால் உப்பு சாரமற்றுப் போனால் வேறு எதனால் சாரம் ஏற்றப் பெறும்!

(புதிய ஏற்பாடு: லூக்காஸ் 14:34)

என்று விவிலியம் கூறும். இந்த இரங்கத்தக்க நிலைமைக்கு இன்றையச் சமய உலகு வந்திருக்கிறது. அன்பு கூர்ந்து