பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

173


சிந்தனை செய்மின் ! அண்டங்களை, கண்டங்களை இன்று சாலைகள் இணைத்து வெற்றி பெற்றுவிட்டன. ஆனால், மானிடச் சாதியின் நெஞ்சங்களை, நெறிகள் இணைத்து வெற்றி பெறவில்லை. நாடுகளைக் கடந்தும்கூட மானிட உலகத்தை இணைக்க வேண்டும். அதற்குச் சமயம் பயன்படுமானால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். மானிட உலகத்தின் தேவைக்குச் சமயத் தத்துவங்களைச் செழிப்பூட்ட வேண்டியிருந்தால் பழையன கழித்துப் புதியன சேர்த்துச் செழிப்பூட்டப் பற்றும் பாசமும் தடையாக இருத்தல் கூடாது.

உலகச் சமயங்கள் அனைத்தும் போற்றுதலுக்குரியன. அச்சமயங்களைக் கண்ட தலைவர்களை நாம் உளமாரப் போற்றுகின்றோம். பிறப்பு-அவ்வழிப்பட்ட பழக்கம் காரணமாகச் சமயநெறிகளை ஏற்றுக்கொள்ளுதல் நன்றன்று ஏற்றுக் கொள்ளும் கொள்கை, நம்பிக்கைக்குரியதாக இருக்க வேண்டும்; நல்லெண்ணத்திற்குரியதாக இருக்க வேண்டும்; மானிடச் சாதிக்கு நிலையான இன்ப வாழ்வை வழங்குவதாக இருக்க வேண்டும். இது நம் கொள்கை ஏற்புக்குரிய அடிப்படை அளவுகோல். இந் நிலையில் நின்று ஆராய்ந்தால் தமிழகத்தில் தோன்றிய சித்தாந்தச் சிவநெறி வளர்ந்த தத்துவச் செழுமையுடையது; வேறுபாடுகளைக் கடந்தது; சித்தாந்தச் செந்நெறி இன்னும் சமயநெறியாளர்களால் முழுமையாக ஆய்வு செய்யப் பெறவில்லை; அதனுடைய தெளிவான கொள்கை, கோட்பாடுகள் மக்களிடத்தில் விளக்கம் செய்யப் பெறவில்லை; ஏன்? அதுவே கலப்புகளின் காரணமாக மறைக்கப்பட்டுள்ளது. நடுநிலை நெஞ்சத்தோடு சித்தாந்தச் செந்நெறியை ஆராயுங்கள்! விவாதம் செய்யுங்கள்! தேர்ந்து தெளியுங்கள்! தெளிவான முடிவுகளைச் செயற்படுத்துங்கள்.

சித்தாந்தச் செந்நெறியை ஆராய்தறிந்துணர்ந்த மேனாட்டறிஞர்கள் அதைச் சிறப்பாகப் பாராட்டியுள்ளனர். டாக்டர் ஜி. யூ. போப் அவர்கள்,