பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

177


உச்சவரம்பை எட்டியது சித்தாந்தம் என்பர். அறிவியலாராய்ச்சிக்கு இங்ஙனம் கூறுதல் இயைபன்று. ஆயினும் சித்தாந்தச் செந்நெறி, கண்டு உணர்த்தியுள்ள முடிவினை மறுத்துப் புதிய முடிவுகளைக் காண்பார் யாரும் இதுவரையில் தோன்றவில்லை. சித்தாந்தச் செந்நெறியைச் சார்ந்தவர்களும்கூட பெயரளவில் வாழ்ந்தனரேயன்றி உள்ளார்ந்த அனுபவத்தில் ஈடுபடவில்லை. அதனால் புதுமைகள் தோன்ற வாய்ப்பில்லாமல் போய் விட்டது.

சமய நெறிக்கு எதிராகச் சிந்தித்தவர்களும்கூட பொதுவுடைமைக் கொள்கையாளர் உள்பட - சைவ சித்தாந்தக் கோட்பாடுகளை அணுகி ஆராய்ந்து மறுக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. அவர்களுடைய கவனத்தை ஈர்க்கும் அளவுக்குச் சித்தாந்தத் செந்நெறியின் செயற்பாடும் இல்லை.

சித்தாந்தச் செந்நெறிக் கொள்கையின் அடிப்படை “உள்ளது போகாது, இல்லது வாராது” என்பது. இஃது அடிப்படையான வாய்பாடு. சித்தாந்த நெறியினர், “என்றும் உள் பொருள்களாக மூன்று உள” என்ற அடிப்படையில் ஆய்வைத் தொடங்குகின்றனர். அப்பொருள்கள் முறையே இறை, உயிர், தளை என்பன. இம்மூன்றும் படைக்கப் பட்டனவும் அல்ல; அழிவனவுமல்ல. இவை மூன்றும் என்றும் நிலையாக உள்ள பொருள்கள் என்பது சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கை, இந்த அடிப்படைக் கொள்கையின் மூலமாகவே சமய நெறி எதிர்ப்புக் கொள்கைகள் பல சரிந்து போகும். அவை எங்ஙனம் சரிகின்றன என்பதைப் பின்னால் விளக்குவோம்.

இம்மூன்றில் முதற் பொருள் இறை-கடவுள். சித்தாந்தச் செந்நெறி, கடவுளைச் “சிவம்” என்று பாராட்டும், சிவம் என்ற சொல்லின் அடிப்படையில் தோன்றிய “சைவம்” என்ற சொல் மணிமேகலை காலத்தில் தொடங்கி வழங்கி வருகிறது. அதன் பின்னெழுந்த இலக்கியங்களில் ‘சிவம்’ என்ற சொல் பெருவழக்காகப் பயிலப் பெற்றுள்ளது. சைவ சித்தாந்தத்தின்