பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தத்துவத்தை உள்ளடக்கிய சொல் கடவுள் என்பது. கடவுள் என்ற சொல்லுக்குப் பொருள் “உலகத்தைக் கடந்தும், உள்ளி ருந்தும் இயக்குதல்-நடத்துதல்” என்பதாகும். கடத்தல் என்பது இடத்தைக் கடப்பது; காலத்தைக் கடப்பது; பொருளின் தன்மைகளைக் கடப்பது என்று பொருள் தரும்; கடவுள் எந்தப் பொருளின் எல்லையிலும், எந்த நாட்டின் எல்லையிலும் அடங்கியதல்ல. நாடுகளைக் கடந்து நாட்டின் எல்லைகளைக் கடந்தது கடவுள் என்பதனை:

தென்னா டுடைய சிவனே, போற்றி
எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி

(திருவாசகம் திருவெம்பாவை 164-165)

என்ற அருள் மொழியாலறிக.

அடுத்து, காலத்தைக் கடப்பதென்பதற்கு, காலம் தாழ்த்தல் என்பது பொருளன்று. அவர் தோன்றிய காலமும், மறையும் காலமும் இல்லை. அது மட்டுமன்று கால எல்லைகளுக்குபட்பட்டு நிற்றலுக்குரியவையாகிய பிறப்பு, மூப்பு, பிணி, மரணம் ஆகியவைகளும் அவர்க்கு இல்லை. இந்தக் குறிப்பினைக் காலனைக் காலால் கடிந்தான் அடியவர்க்காக!! என்ற வரலாற்றுக் குறிப்பால் உணர்க.

காலனைக் காலால் காய்ந்த கடவுள்

(அடங்கன்முறை 6580)

என்று அப்பரடிகள் போற்றுவார்.

மாணிக்கவாசகப் பெருமான், காலம் கடந்தவன் இறைவன் என்பதை இறைவனின் பழைமையை உணர்த்தும் பொழுதுகூட, கால எல்லையைச் சுட்டாமல்,

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே!
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும்அப் பெற்றியனே...

(திருவாசகம், திருவெம்பாவை. 163)

என்றும்,