பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


எல்லோருடலிலுமுள்ள ஒவ்வொரு ஆன்மாவும் உண்மையானது. இதனை,

எண்ணரிதாய் நித்தமாய் இருள்மலத்தின் அழுந்தி
இருவினையின் தன்மைகளுக் கீடான யாக்கை
அண்ணலரு ளால்நண்ணி அவைஅவரா யதனால்
அலகில்நிகழ் போகங்கள் அருந்தும் ஆற்றால்
புண்ணியபா வம்புரிந்து போக்குவர வுடைத்தாய்ப்
புணரும்இருள் மலபாகம் பொருந்தியக்கால் அருளால்
உள்நிலவும் ஒளியதனால் இருளகற்றிப் பாதம்
உற்றிடும்நற் பசுவருக்கம் எனஉரைப்பர் உணர்ந்தோர்.

(சிவப்பிரகாசம். 19)

என்ற சிவப்பிரகாசத் திருப்பாடலில் அறிக.

உயிர் அறிவுப்பொருள்; ஆயினும் உயிர்க்கு இயல்பாய் அமைந்த ஆணவ அழுக்கின் காரணமாக அறிவு விளக்க முறாது அறியாமையில் கட்டுண்டு கிடக்கிறது. உயிர் உண்டு என்று உடன்படுபவர்கூட, உயிரின் இலக்கணத்தை நிர்ணயிப்பதில் மாறுபடுகின்றார். சிலர், “உடலே உயிர்” என்கின்றனர். சிலர் “மனமே உயிர்” என்கின்றனர். “உயிர் ஆண்டவனால் படைக்கப்பட்டது” என்றும் சிலர் கூறுவர். சிவஞான போதம் இதனை, இரண்டு வார்த்தைகளில் மறுத்து விடை சொல்கிறது. ஒன்றை இல்லையென்று மறுக்க வேண்டியே அவசியமே உண்மையின் காரணமாகத்தான் ஏற்படுகிறது என்பது மெய்கண்டார் கருத்து.

“இலதென்றலின் உளது” (நூற்பா 3) என்பது சிவஞான போத மறுப்புரை. ஆன்மா இல்லையென முடிவு பண்ணும் அறிவு எதுவோ, அதுவே ஆன்மா என்று, சூன்யவாதிகள் கூற்றை நகைப்புக்கிடமாக்கி மறுக்கிறார் மெய்கண்டார். இது ஃபிரெஞ்சு தேசத்துத் தத்துவ ஞானி “டெகார்டே” ஆராய்ந்த முறையோடு ஒத்திருக்கிறது. டெகார்டேக்கு ஒரு நாள் ஒரு சந்தேகம் பிறந்தது. தானும், தான் காணும் பொருள்களும்