பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

185


பொய்யாய் இருக்கலாமோ என்பதுதான் அந்தச் சந்தேகம். அவன் அறிஞன் ஆனதால் சந்தேகத்தையே முடிவுகளாக்கிக் கொள்ளவில்லை. சந்தேகம் ஆராய்ச்சியில் ஈடுபடுத்தியது. அவனுடைய நீண்ட ஆராய்ச்சியின் பயனாக,

“யாவுமே பொய்யான போதும் அவையாவும்
பொய்யெனச் சந்தேகிப்பவன் உண்மையாய்
இருத்தல் வேண்டும்”

என்றான். உடலே உயிர் என்ற கொள்கையையும் எளிதில் சொல்வழக்கில் கொண்டே சித்தாந்த சாத்திரம் மறுக்கும்.

“எனதுடல் என்றவின்”.

(நூற்பா 3)

என்பது சிவஞானபோதம், ‘எனது உடல்' என்பது வழக்கு. ஆன்மாக்கள், ஆண்டவனால் படைக்கப்பட்டன என்ற கொள்கை மிகவும் ஆபத்தானது. படைக்கப்பட்டன என்றால் அவற்றுக்கு நிலையான தன்மையில்லை; அவை அழியும் என்றாகும். அதுபோலவே படைக்கப்பட்டன என்றால் படைக்கப்பட்டன வற்றிற்கென்று தனியே அறிவும் குணமும் செயலும் இருத்தற்கில்லை.

படைப்பாளியின் அறிவும் குணங்களுமே படைக்கப் பட்டனவற்றின் அறிவும், குணமுமாக இருக்கும். ஆன்மா இறைவனால் படைக்கப்ப்டடது என்றால் ஏன் படைத்தான்? என்ற வினாவும் எழும். அடுத்து, ஆன்மாக்கள் பெறும் உடல்களில் உள்ள குறை நிறைகள். அறிவில் பெறும் தராதரங்கள் இவைகளை நோக்க ஏன் இப்படி வேறுபாடுகளோடு படைக்கிறான்? என்ற வினாவும், பின்னணியாக இறைவன், வெறுப்பு-விருப்புகளுடையான் என்ற முடிவுகளும் தோன்றும். இத்தகைய முடிவு சமய நெறியின் அடித்தளத்தையே அசைத்து விடும். இந்த இடர்ப்பாட்டைக் கருதித்தான் சித்தாந்தச் சமயம், ஆன்மாக்கள் படைக்கப்பட்டன அல்ல என்ற தெளிவான முடிவை எடுத்து உள்ளது.