பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆன்மாக்களிடையில் ஏற்பட்டுள்ள குறை நிறைகளுக்கு அவ்வான்மாக்களை இயல்பாகவே பற்றி நிற்கும் ஆணவமும், அவ்வழி செயற்பட்ட ஆன்மாவின் செயல்களுமே காரணம். ஆன்மா என்பது முன்னர்க் கூறியது போல என்றும் உள்ளது; எங்கும் பரவியது. அறிவுடையது. இந்த ஆன்மாவை இயல்பாகவே ஆணவம் என்னும் அழுக்குப் பற்றி நிற்கிறது. இதற்கு மெய்கண்ட சாத்திரம் காட்டும் உவமை “செம்பிற் களிம்பு போல, நெல்லிற்கு உமி போல” என்பனவாகும். இதனை,

அல்லல்மிக உயிர்க்கிவைதான் அணைத்த தீசன்
அருவினைகள் அருந்துதற்கோ வினையோ அன்றிச்
சொல்லிவரு மாயையோ அணுவை முந்தச்
சூழ்ந்ததெனும் உரைமுதலோர் தொடக்கி லார்பால்
ஒல்லைவரு மெனின் உளதாம் உயிருண்டாவே
உளதுமலம் மலமுளதாய் ஒழிந்த வெல்லாம்
நெல்லின்முளை தவிடுமிபோல் அநாதியாக
நிறுத்திடுவர் இதுசைவம் நிகழ்த்து மாறே

(சிவப்பிரகாசம் 25)

என்று சிவப்பிரகாசம் கூறுகின்றது. ஆணவம், மாயை, கன்மம் ஆகியவற்றில் முளையைப் போன்றது எது? தவிட்டைப் போன்றது எது? உமியைப் போன்றது எது? என அறிந்தால் மேலும் விளக்கமுறும் முளையைப் போன்றது கன்மம்; தவிட்டைப் போன்றது மாயை, உமியைப் போன்றது ஆணவம், அரிசிதான் ஆன்மாவுக்கு உவமையாகிறது. நெல்லில் உள்ள முளைத்தல் சக்தி முளையைத் தோற்றுவித்தல்போல கன்ம மலம் உயிரினிடத்துச் சுக, துக்கங்களை முதற்காரணமாய் நின்று தோற்றுவிக்கும். தவிடு, முளைத்தற்கு அனுகூலம் செய்து துணை நிற்றல் போல மாயாமலம் சுகதுக்கம் தோன்றுதற்குத் துணைக் காரணமாய் அமைந்து, தன் காரியமாகிய கருவிகளையும் துய்ப்பனவு