பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

189


பழவினை (சஞ்சிதம்), நிகழ்வினை அல்லது துய்ப்பு வினை (பிராப்தம்), எதிர்வினை அல்லது வருவினை (ஆகாமியம்) என்பன அவை. பழவினை என்பது உயிர்களால் துய்க்கப் பெறாமல் எஞ்சி நிற்கும் வினை. துய்ப்புவினை அல்லது ஊழ்வினை என்பது இப்பிறப்பில் துய்ப்பதற்குரியது. இப்பிறப்பில் வினைகளைத் துய்க்கும் பொழுது விருப்பு வெறுப்புகளால் அலைக்கப்பட்டுத் தோன்றுவது எதிர்வினை (ஆகாமியம்).

வினையின் பயனை அனுபவித்தலும் முயற்சியும் முரண்பாடுடையனவல்ல. திருவருள் சிந்தனையோடு கூடிய முயற்சியின் முன்னால் வினைவலி நிற்காது. வினை வலிது என்று நினைந்து வாளாத் துன்புறுதல் நியதியன்று. அங்ஙனம் துன்புறும் பொழுது, மீண்டும் உயிர் வினைகளுக்கு ஆளாகும். ஆதலால், வினைவலியறிந்து, திருவருள் துணைகொண்டு அயர்விலா முயற்சிகளில் ஈடபட்டுப் பணிகளைப் பாங்குடன் செய்து, பயன்களைப் பற்றின்றி இறைவனையே அடைக்கலமாகக் கருதி வாழ்தல் வினை நீக்கத்திற்கு உரிய எளிய வழி.

தன்கடன் அடியேனையும் தாங்குதல்
என்கடன் பணிசெய்து கிடப்பதே

(அடங்கன்முறை - 5420)

என்பதை அறிக.

இந்த ஆணவ மலத்தால் ஆன்மா கட்டுண்டு கிடப்பதனாலேயே பசு என்று பெயர் பெற்றது என்பர். ஆணவம், ஆன்மாவின் விரிவை, அறிவைக் கெடுத்து அறியாமையில் ஆழ்த்தும். இங்கு அறியாமை என்பது யாதொன்றையும் அறியாமலிருப்பதன்று. யாதொன்றையும் அறியாதிருத்தல் உயிரின் இயல்பன்று. ஒன்றைப் பிறிதொன்றாகப் பிறழ உணர்தலையே “அறியாமை” என்று சித்தாந்த சாத்திரம் உணர்த்துகிறது. ஒன்றைப் பிறிதொன்றாகப் பிறழ உணர்