பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வதற்குக் காரணம், ஆணவத்தின் தொழிற்பாடே! ஆன்மா, என்றும் உளதாயினும், நிலையானதாயினும் அதனியல்பு ஏதாவதொன்றைச் சார்ந்து நிற்பது. ஆன்மா சார்ந்திருக்கக் கூடிய சார்புகள் இரண்டு. முதல் சார்பு இயல்பாயமைந்த ஆணவச் சார்பு. இரண்டாவது சார்பு, ஆன்மா மாயை வழி கிடைத்த கருவிகளைத் துணையாகக் கொண்டு ஆணவத்தின் இயல்பறிந்து அதன்வழிச் செல்லாமல் சிவசக்தியின் வழிச் சென்று இன்ப துன்ப உணர்வுகளைக் கடந்து சிவமாம் தன்மையைச் சார்தல். இதுவே உயிரின் இலட்சியம்-அதன் வாழ்க்கைப் பயணம். இந்தப் பயணம் இனிதே நிறை வேறினால் ஆன்மா இன்ப அன்பில் நிலைத்து நிற்கும்.

................. மெய்யருளாம்
தாயுடன் சென்றுபின் தாதையைக் கூடிப்பின் தாயைமறந்து
ஏயும்அதே நிட்டையென் றான்எழிற் கச்சி ஏகம்பனே

(பட்டினத்தார். திருஏகம்பமாலை - 10)

என்பதை ஓர்க.

திருவள்ளுவர். இந்தச் சிறந்த சித்தாந்தக் கருத்தை இரண்டு குறள்கள் மூலம் விளக்குகிறார்.

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்

(குறள்.359)


நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு

(குறள். 452)

என்ற திருக்குறள்கள் ஒப்பு நோக்கத்தக்கன. ஆன்மா, இந்த இலட்சியப் பயணத்தில் அடையும் அவத்தை நிலைகள் மூன்று. மூன்று அவத்தைகளில் முதலாவது அவத்தை ஆணவ மலத்தோடு ஆன்மா கலந்திருத்தல், ஆணவத்தை இருள் என்றும், சிலர் உருவகம் செய்வர். வள்ளுவம் இருள் சேர் இருவினை என்று கூறும் ஆணவம் இருளோடு ஒத்திருப்பினும், இருளைவிட ஆணவம் கொடியது.