பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

193


வாயில்கள், தத்துவங்கள், அறிவு வாயில்கள் அனைத்தும் தோன்றி, அனைத்தையும் ஆன்மா அடைந்து வாழ்ந்து, வளர்ந்து எல்லையிலா இன்பநிலையை எய்துகிறது.

இம் மலங்களின் கூட்டு, ஆன்மாவின் துய்மைக்குத் துணை செய்வனவாகும். “அழுக்கு உடையை வெளுக்க உவர் மண்ணைச் சேர்க்கும் கூட்டைப் போன்றது இது” என்று சித்தாந்தம் கூறும். இந்நிலையைச் சகலாவத்தை என்று சாத்திரம் கூறும். இச் சகலாவத்தை நிலையே மானிட நிலை. உயிர்கள் சகலாவத்தையிலிருந்து கேவலாவத்தைக்கும் கூட மாறிச் செல்வதுமுண்டு. இங்ஙனம் மாறுவதெல்லாம் உயிர் இளைப்பாறுதல் பொருட்டேயாம். கேவலாவத்தையில் ஆன்மாவுக்கு அறிவு கிடையாது. சகலாவத்தையில் தனு, கரணங்களின் துணையினால் ஆன்மா, சிறிது அறிவு விளக்கம் பெறும். ஆனாலும் ஆன்மாவின் அறிவு நிறைதல் அறிவன்று. சகலாவத்தையில் ஆன்மாவின் அறிவு, நிலையற்ற பொருள்களை மட்டுமே அறிய முடியும். ஆதலால் இஃது அறிவன்று. இஃதொரு மயக்கநிலை! நிலையற்றனவற்றை நிலையாயின போலவும், துன்பங்களை இன்பம் போலவும், கருதி மயங்கி நிற்கும் நிலை. முன்னைய கேவலாவத்தை இருள்நிலை; இரண்டாவதாகிய சகலாவத்தை மருள்நிலை. அதாவது மயக்க நிலை. அறியாமையையும், அரைகுறை அறிவையும் நீங்கி, ஆன்மா நிறைநல அறிவைப் பெற வேண்டும். அந்நிலையை அடைய இறைவன் அருள் வேண்டும். இறைவன் அருள் பெறும் நிலையே அருள்நிலை. அல்லது சுத்தாவத்தை நிலை! ஆன்மாக்கள் இந்த மூன்று அவத்தை நிலைகளையும் அடையும் நடைமுறைக்கும் இறைவனின் ஐந்தொழில்களுக்கும், தொடர்பு உண்டு. இறைவனது அழித்தல் தொழிலால் ஆன்மா கேவலாவத்தை நிலையை அடைகின்றது. படைத்தல், காத்தல், மறைத்தல் ஆகிய முத்தொழில்களின் வழி, ஆன்மா சகலாவத்தைக்கு ஆளாகின்றது. ஐந்தாவது தொழிலாகிய அருளல்