பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சுத்தாவத்தை நிலையை அடைவதற்குத் துணையாய் அமைகிறது. இங்குப் படைத்தல், காத்தல், மறைத்தல், அழித்தல் என்ற சொல்வழக்குகள் உணர்த்தும் பொருள் வேறு. இங்குப் படைத்தல் என்பது உயிர்களை, கன்மங்களைப் படைப்பதன்று. ஆன்மாக்கள் கருவி கரணங்கள் பெறத் துணைசெய்தலே படைத்தல். அங்ஙனமே காத்தல் என்பது அக்கருவி கரணங்களோடு ஆன்மா இசைந்து நின்று துய்க்குமாறு செய்தலேயாம். மறைத்தல் என்பது ஆன்மாவைப் பற்றி நிற்கும், கன்மத்தின் இயல்பினை மறைத்தல் என்பதேயாம். அழித்தல் என்பது ஆன்மாவிற்கு ஆணவக் கூட்டால் ஏற்பட்ட தீமையை அழித்தலேயாம். அருளல் என்பது ஆன்மாவின் ஆணவ ஆற்றலை ஒடுக்கி, அதனைச் சேட்டைகளினின்றும் விடுவிடுத்து, சிவத்தின் திருவருளில் தங்கச் செய்து, இன்ப அன்பினை ஆர்ந்து அனுபவிக்கச் செய்தலேயாகும். ஆன்மா, ஆணவத்தின் துன்பத் தொடக்கிலிருந்து விடுபட்டு இன்ப அன்பினை அடைய, சிவமே துணை நிற்கிறது. இந்தச் சிவத்தினைச் சாரும் வாழ்க்கை முறையே சைவ வாழ்க்கை.

இறைவனை, ஆன்மா அடைய, நான்கு நெறிகளைச் சைவம் காட்டுகிறது. அவை சரியை, கிரியை, ஞானம், யோகம் என்பன. இந்நான்கு நெறிகளின் வழி ஆன்மாக்கள் பத்திமையும், தொண்டும் மேற்கொண்டு வாழ்வதால் ஆன்மா உய்தி பெறுகிறது. இறைநெறியில் நின்று ஒழுகுதலால் செயல்களும் நிகழும்; செயல்களின் பயனும் உயிர்க்கு வாரா. இறை நெறி நின்று வாழ்பவர்கள் விருப்பு வெறுப்புகளுக்கு ஆளாக மாட்டார்கள். இன்ப துன்ப உணர்வுகளால் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள். இதனால் ஓடும், செம்பொன்னும் ஒக்கவே நோக்கும் உயர் நிலையை ஆன்மா அடையும். இந்நிலையை ஆன்மா எய்துதலே இருள் நீங்கப் போகிறது. அழுக்கு அகலப் போகிறது. அறிவும் ஒளியும் ஆன்மாவிடத்தில் பிரகாசிக்கப் போகிறது என்பதன்