பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

195


அடையாளமாகும். இந்நிலையை “மலபரிபாகம்” என்று சாத்திரம் கூறும். ஆணவ மலமேயானாலும் அதை முரட்டுத் தனமாக அகற்ற முடியாது.

உடையைச் சார்ந்தது அழுக்கேயானாலும் அதையும் நனைத்து மெல்ல ஊற வைத்துத்தான் அகற்ற வேண்டும். நெல்லைச் சார்ந்துள்ள உமியை, நெல்லினின்றும் பிரித்து அரிசியைக் காண, நனைத்தலும், அவித்தலும் ஆகிய தொழில்கள் நிகழ்ந்து அரிசிக்கு ஊறு ஏற்படாவண்ணம் உமியை நீக்குவோம்.

உடைக்கு ஊறு நேராவண்ணம் நனைத்தலும், ஊற வைத்தலும் அழுக்கை நீக்கும். அதுபோல இறையின் கருணை ஆன்மாவுக்குத் துய்ப்பனவும், உய்ப்பனவும் நல்கி ஆணவத்திலிருந்து ஆன்மாவை எடுத்தாள்கிறது. இந்நிலையில் சிவத்தின் அருளாக நின்று தொழிற்படும் அருட்சக்தி ஆன்மாவிடத்தில் பதிகிறது. திருவருட்சக்தி பதிதலால் ஆன்மா ஞானத்தினைப் பெற்று அச்சக்தியின் வாயிலாக இறைவனைக் கண்டு மகிழ்கிறது. இறைவனும் எளிதில் வெளிப்பட்டு எடுத்தாள்வான்.

ஆன்மாவின் இலட்சியமாக இருப்பது வீடுபேறு. ஆணவத்திலிருந்தும், அவ்வழிப்பட்ட இன்ப துன்பங்களிலிருந்தும் விடுதலை தருவது வீடு. முத்தி நிலையை விளக்குவதிலும் சமயங்கள் மாறுபடும்; முத்தி நிலையில் இறைவனோடு ஆன்மா கலந்து மறைந்து போகிறது என்பார் சிலர். இது ஆன்மாவுக்கு அழிவில்லை என்ற கருத்தோடு மாறுபடும். அதுமட்டுமன்று. ஆன்மாவுக்கு இயல்பிலே அமைந்த உண்மையாகிய துய்ப்பு நிலையும் போகிறது. அதனால் ஏற்புடையதன்று. சித்தாந்த முத்தி என்பது நுட்பமானது. முத்தி நிலையிலும் ஆன்மாவும் உண்டு; சிவமும் உண்டு. அவை இரு வேறு பொருள்தாம்! ஆனால் ஆன்மா தன் தன்மையை இழந்து சிவமாம் தன்மையைச் சார்ந்து ஒன்று