பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


போலத் தோற்றமளிக்கிறது. எண்ணிக்கையால் இரண்டு. அனுபவத்தால் இரண்டு; தன்மையால் ஒன்று. முத்தி நிலையில் ஆன்மா அனுபவிக்கும் இன்பத்தை; மாணிக்க வாசகர்,

ஆனந்த வெள்ளத் தழுந்தும்ஓர் ஆருயிர் ஈருருக்கொண்(டு)
ஆனந்த வெள்ளத் திடைத்திளைத் தால்ஒக்கும்; அம்பலம்சேர்
ஆனந்த வெள்ளத்து அறைகழ லோன்அருள் பெற்றவரின்
ஆனந்த வெள்ளம்வற் றாதுமுற் றாதுஇவ் அணிநலமே.

(திருக்கோவையார் - 307)

என்பர்.

மேலும் சித்தாந்த முத்தியினை இனிதே விளக்க தாள்+தலை என்னும் சொற்களின் புணர்ச்சி எடுத்துக் காட்டாகச் சித்தாந்த நூல் கூறும் தாள், என்கிற நிலை மொழியும் தலை என்கிற வருமொழியும் முதல் தகரமும் சேர்ந்து டகரமாகத் திரிந்து தாடலை என்று ஆகின்றது. “தாடலை” என்கிற இதனை, புணர்ந்து நிற்கும் நிலையில் இரு சொற்கள் என்று கொள்ளவும் முடியாது. ஒரு சொல் என்று கொள்ளவும் முடியாது. ஒரு நோக்கில் ஒரு சொல், பிறிதொரு நோக்கில் இரண்டு சொல். ஆன்மா கள்ணொளியோடு கூடி நின்று காணும் காட்சி போல ஆன்மா இறைவனோடு கலந்து நின்று துய்த்து மகிழ்கிறது.

இத்தகைய சிறந்த தவநெறி வாழ்க்கையை உயிர்கள் அடைய சிவமே உயிர்கள் மாட்டுக் கருணை கொண்டு குருவாக எழுந்தருளித் தீக்கைகள் செய்வித்து ஞானத்தை உணர்த்துகின்றது. சைவ சமய சித்தாந்தச் செந்நெறியில் வழிபடு பொருள்கள் மூன்று. முதலாவது குரு இரண்டாவது இலிங்கம்; மூன்றாவது அடியார் திருக்கூட்டம். இம்மூன்று வழிபாடுகளும் ஒன்றோடொன்று தொடர்புடையன. ஆசிரியன் உணர்த்தினாலன்றி உயிர் தன்னை அறியாது.