பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உணர்வில் கூடிவாழும் கூட்டமைப்பே சமுதாயம். கூடும் அன்பினில் கூடாமல், வெறும் பயனற்ற கூட்டத் தொகுதிக்குச் சமுதாயம் என்று பெயர் பொருந்தாது.

தனி மனிதர்கள் மாமழையின் சிறு துளிகளைப் போல விளங்கித் துளிகள் பல சேர்ந்து பேராறாக விளங்குதல் போலச் சமுதாய அமைப்பு, பேராற்றலும் தண்ணளியும் உடையதாக அமைய வேண்டும். அலைகடலின் தண்ணீர்ப் பரப்பில் கோடானு கோடி தண்ணீர்த்துளிகள்! அத்துளிகளின் கூட்டமைப்பால் கடல்நீர்ப் பெருக்கம்.

ஆனால் அக்கடல் நீர்ப் பெருக்கத்திலிருந்து ஒரு துளி பிரிந்து கரையில் விழுந்தால், அது அடுத்த வினாடியே வற்றி மறைந்து போகிறது. மானிடச் சமுதாயம் கடல் நீரைப் போலக் கூடிவாழ்தலை இலட்சியமாகக் கொள்ள வேண்டும். வேற்றுமைகளுக் கிடையிலும் ஒருமை காண வேண்டும் ஒத்த உணர்வுகளைப் பெற்றுக் கூடித் தொழில் செய்ய வேண்டும். வையம் உண்ண உண்ண வேண்டும்; வையம் உடுத்த உடுத்த வேண்டும்.

சமுதாயத்தின் கூட்டு வாழ்க்கை ஒப்புரவு நெறியாக மலர்தல் வேண்டும். ஆக்க வழியில் சேர்ந்து, வாழ்ந்து, வரலாற்றுக்கு வளம் சேர்த்துச் சமுதாய அமைப்பைக் கட்டிக் காப்பாற்ற வேண்டும். “ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காகவும்” என்ற உயர்கொள்கை, சமுதாய வாழ்க்கையின் உயிர் நிலையாகும்.

வாழ்க்கை அருமைப்பாடுடையது; பயன்பாடுடையது; சிறப்பினைத்தருவது; மனித வாழ்க்கையின் அனைத்துச் சிறப்புகளுக்கும் வாயிலா அமைவது. ஆனாலும் அது, இயல்பில் எந்தவொரு குணமும் இல்லாதது. மண்ணினைச் சேராத மாமழைத்துளிபோல, மனம், சாரும் பொருள்களுக்கேற்பவும், வாழும் சமுதாய அமைப்புக்கேற்பவும், கற்று அறியும் நூல்களுக்கு ஏற்பவும், கேட்டு அறியும் செய்திகளுக்கு