பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

201


ஏற்பவும், உற்று அறியும் உணர்வுகளுக்கு ஏற்பவும் சிறப்பை அல்லது சிறப்பின்மையை அடைகிறது.

மனம், உயிரை வளப்படுத்தும் தலைவாயில். மனத்தின் வாயிலாகத்தான் உயிர், சிறப்பினை அல்லது இழிவினை அடைகிறது. மனம் ஓயாது தொழிற்படும் இயல்பினது; உறக்கத்திற்கூட அது தொழிற்படும். அதன் தொழில் இயக்க விரைவுக்கு ஏற்றவாறு அதற்கு நன்னெறிகளை நற்பணிகளை வழங்காவிடில் அது சைத்தானாக மாறித் தொல்லை கொடுக்கும்.

மனத்தை நற்சிந்தனையில், நற்செயலில் பழக்கப்படுத்தி விட்டால் அதைவிடச் சிறந்த துணை வேறு இல்லை. மனத்தை நறுமணமிக்க மலர்ச் சோலையாகவும் ஆக்கலாம்; நரகமாகவும் ஆக்கலாம். இதற்கு ஆற்றலுடைய மனத்தை நெறிப்படுத்தி நினைப்பிக்கவே வழிபாட்டு முறைகள் தோன்றின.

நீநாளும் நன்னெஞ்சே நினைகண்டாய் யாரறிவார்
சாநாளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டெம் பெருமாற்கே
பூநாளுந் தலைசுமைப்பப் புகழ்நாமஞ் செவிகேட்ப
நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே
(அடங்கன். 1908)

என்று வேண்டுகிறார் திருஞானசம்பந்தர்.

பேரறிவும் பேராற்றலும் உடைய இறைநெறியின் வழியில், வழிபடுதலே வழிபாடாகும் ஆனால் இன்று பலர், கடவுளுக்காக வழிபாடு என்று கருதுகின்றனர். உண்மை அதுவன்று. வழிபாடு, கடவுளை முன்னிலைப்படுத்திச் செய்யப் பெறுவதேயாம். ஆனால், பயன் கடவுளுக்கன்று.

கடவுள், வழிபாட்டை ஏற்றுக்கொண்டு வழிபாட்டின் பயன்களைக் கைம்மாறாகத் தருபவனும் அல்லன். வழிபாட்டு நெறிகளில் உயிர் நிற்றல் மூலம் அது பெறும்