பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

207


சூழ்ந்துவலங் கொண்டுஇறைவர் திருமுன்பு எய்தித் தொழுதுதலை
மேற்கொண்ட செங்கை போற்றி
வீழ்ந்தெழுவார் கும்பிட்ட பயன்காண் பார்போல் மெய்வேடர்
பெருமானைக் கண்டு வீழ்ந்தார்.

(திருத்தொண்டர் புராணம் பா. 2925)

ஆக ஞானத்தின்-பூசனையின் பயன் அன்பேயாதல் பெறப்படுகிறது. அறியாமையால் கொச்சைப்பட்ட ஆசைகளைச் சிலர் அன்பு என்பர்; அஃது அன்புபோலக் காட்டும். ஆனால் வணிக நோக்குடையது. அது அன்பேயன்று; இதனை அன்பு என்று கூறுவது பாவம். இது ஆசை. ஆசை நிர்வாணத் தன்மையுடையது; வெட்கம் அறியாதது. மற்றவர்களும் வாழவேண்டும் என்ற உணர்வு ஆசைக்கு இருக்காது; ஆசை தற்சார்பு நிலையிலேயே தொழிற்படும்; காரியத்திலே கண் வைக்கும். அதனாலன்றோ திருமூலர்,

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்

(திருமந்திரம் - 2570)

என்று கூறினார். ஆசை மற்றவர்களைப் பற்றிக் கவலையே படாது. எங்கும் எதிலும் எப்போதும் ஆதாயம் தேடி அவலத்தை அணைத்துக் கொள்ளும் சிறுமைக் குணம் ஆசைக்கு உண்டு. ஆதலால் உயிரைத் தழைக்கச் செய்து வளர்க்கும் அன்பினையே உயிர்ப்பாகக் கொள்ள வேண்டும். “அன்பின் வழியது உயிர்நிலை” என்ற வள்ளுவம் வாழ்க்கையாக மலர்தல் வேண்டும்.

உயிர்க்கு நலம் தரும் அறிவும், அன்பும் இயங்கும் தன்மையன; இயக்கும் தன்மையன. இவையிரண்டும் தொழிற்படுத்தப்படுவதன் மூலம்தான் மேலும் மேலும்